யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீது மயக்க மருந்து வீசி கொள்ளை

இணுவில் பகுதியிலுள்ள விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்றுவரும் பல்கலைக்கழக மாணவர்கள் மீது, மயக்கமருந்து தெளித்து அவர்களின் 8 அலைபேசிகள், 2 துவிச்சக்கரவண்டிகள் மற்றும் 8 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியன திருடப்பட்ட சம்பவமொன்று, செவ்வாய்க்கிழமை (01) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மலையகத்தைச் சேர்ந்த 13 மாணவர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தில் 2ஆம் ஆண்டில் கற்று வருகின்றனர். இவர்கள் இணுவில் பகுதியிலுள்ள கடைத்தொகுதியை வாடகைக்கு எடுத்து அதில் தங்கி உள்ளனர்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (01) அதிகாலை இவர்கள் தூங்கிக்கொண்டிருந்த போது, ஜன்னல் வழியாக மயக்க மருந்து தெளித்துள்ள சந்தேகநபர்கள் சிலர், மாணவர்களின் உடைமைகளைத் திருடிச் சென்றுள்ளனர். மயக்கம் தெளிந்து எழுந்த பின்னரே, அவர்கள் மீது மயக்க மருந்து தெளிக்கப்பட்டமையும் உடமைகள் திருடப்பட்டமையும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் மாணவர்கள் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.