யாழ் பல்கலைக்கழக மாணவிக்கு பஸ்சிற்குள் நடந்த பாலியல் சேட்டைகள்!! மனம் திறந்தார் மாணவி

இந்தக்கதை உங்களிற்கு மகிழ்ச்சியளிப்பதாக இருக்காது. இப்படியான கதைகளை எழுதினால் நமது கலாசாரம் என்னாவது என்றும் சில கலாசார காவலர்கள் பொங்கியெழலாம்.

ஆனால் இந்தக்கதையை நான் பேசியே ஆகவேண்டும். ஏனெனில் இது நமது சமூகத்தில் அங்கமொன்றாக உள்ளது. கலாசாரத்தின் எல்லைகள் ஏன் நிர்ணயிக்கபடுகின்றன? அதனை தாண்டுபவர்களும் உள்ளனர் என்பதால்த்தானே?

நானொரு பெண். என்னைப்போன்ற பெண்களிற்கு, சக ஆண்கள் உறவுகளாகத்தான் உள்ளனர். அப்பாவாக, அண்ணாவாக, தம்பியாக, காதலனாக, கணவனாக இன்னும் என்னென்னவோவாக எல்லாம். ஆனால், ஒவ்வொரு ஆணும் பொது இடத்தில், அறிமுகமில்லாத இடத்தில் சந்திக்கும் பெண்களை அப்படி அணுகிகுறானா? இன்னும் பாலியல்கொடுமையும், துஷ்பிரயோகங்களும் ஏன் தொடர்கின்றன? விடையில்லாத கேள்விகள் இவை.

மனித ரூபத்தில் நம்மத்தியில் உலாவும் மிருகமொன்றிடம் நான் சிக்கிய உண்மைச் சம்பவமிது. பாதுகாப்பும் பக்கபலமும் கொடுக்க வேண்டிய நமது பிராந்திய ஆண்களே பயங்கரவாதிகளாக மாறிய அந்த சம்பவத்தை, இப்பொழுது நினைத்தாலும் மனமும், உடலும் நடுங்க, கொன்று தீர்க்கும் ஆத்திரம் பெருகுகிறது. இதனை நான் கட்டாயம் பேசியே ஆக வேண்டும். இல்லாவிட்டால் என் நெஞ்சு வெடித்துவிடும்.

அன்று முழுதும் விட்டு விட்டு மழை கொட்டிக் கொண்டு இருந்தது. ஆனால் மழையோ வெய்யிலோ உடனடியாக செய்ய வேண்டிய அவசரவேலை ஒன்று இருந்தது. நண்பியொருத்தியுடன் புறப்பட்டேன். யாழ் நகரத்தில் இருந்து திருநெல்வேலி சென்று, அங்கே வேலைகளை எல்லாம் முடித்த போது மாலை 6 மணியாகிவிட்டது. அவசர அவசரமாக பஸ்ஸிற்கு வந்தோம். மழை இருட்டு. வீட்டில் தேடுவார்கள் என்ற அச்சம் வேறு. பேசகூட முடியாமல் ஒருவரை ஒருவர் பார்த்தபடி பஸ்ஸிற்கு நிற்கையில் புன்னாலைக்கட்டுவன் பஸ் வந்தது. வரும்பொழுதே சற்று சரிவுதான்.

அவ்வளவு சனம். ‘இருட்டி விட்டது. இனியும் தாமதிக்க முடியாது’ என ஏறிவிட்டேம். பரமேஸ்வராவில் இன்னும் கூட்டம் ஏறியது. ஏற்கனவே சரிந்த பஸ் தேய்ந்து கொண்டு வந்தது. கால் கை அசைக்க முடியவில்லை. ‘ஏன்டா ஏறினம். பேசாமல் காச பார்க்காமல் ஓட்டோவில போயிருக்கலாம்’ என்று தோழியும் நானும் பேசிட்டே மூச்சு விட முடியாமல் தொங்கி தொங்கி வந்தோம்.

பரமேஸ்வராவிற்கும் யாழ்.நகரப் பகுதிக்கும் இடையில்தான் அந்த சம்பவம் நடந்தது. நெரிசலின் நடுவே என் தோள்ப்பையை யாரோ இழுப்பதை உணர்ந்தேன். திரும்பி பார்க்க முடியவில்லை. கழுத்தை திருப்ப கூட முடியாமல் கை ஒன்று குறுக்கே நின்றது. நெளிந்து வளைந்து சற்று தள்ள முயற்சிக்கின்றேன். முடியவில்லை. யாரோ ஒருவனிற்கு நான் விளையாட்டுப்பொருளானேன்.

துடித்து போய்… உடல் குளிர்ந்து நடுங்க… பயத்தில் என்னை மறந்து பஸ்ஸிற்குள் நண்பி பெயரை பெரிதாக சொல்லி விட்டேன். கத்திவிட்டேன் என்பதுதான் சரியாக இருக்கும். கண்கள் வேறு குளம் கட்டி விட்டது. நண்பி திரும்பும் முன்னர் பஸ்ஸிற்குள் நின்றவர்கள் எட்டிஎட்டி என்னைப் பார்த்தனர்.

அவர்கள் வேடிக்கை பார்த்ததைப் போலத்தான் இருந்தது. அருகில் நின்ற வயதான பெண்மணியொருவர், ‘என்னம்மா’ என்றார். பதில் கூற முடியவில்லை. ஒன்றுமில்லை என தலையசைத்தேன். அவர் திரும்பி விட்டார்.

அதன் பின்பு மெதுவாக என் நண்பி கேட்டாள் ‘என்னாச்சுடி… ஏன் இப்படி கத்தினாய்’ என. அந்த கசப்பான சம்பவத்தை அவளிடம் எப்படி சொல்வேன். எனக்கு முன்பாகவும்; நிறைய இளம் ஆண்கள் நின்றனர். வெட்கமாக இருந்தது. பிறகு சொல்றேன் என்றேன். அதன் பின்பு எந்தவித சீண்டலும் இல்லை.

ஆனால் என் பின்னால் நின்ற அந்த மிருகம் ஏதோ புறுபுறுத்தது. எனக்கோ உடல் புல்லரிக்கின்றது. முகம் வேர்த்து வடிகிறது. அப்பொழுதுதான் என் நண்பி என்னை சுரண்டினாள். ‘என்னாச்சு’ என்றேன். ‘இதிலேயே இறங்குவோம் வா’ என்றாள். அப்பொழுதுதான் ஆனைப்பந்தியை பஸ் தாண்டியது. ‘கொஞ்சத் தூரம் தானே. நில்’ என்றேன். அவள் கேட்கவில்லை. ‘இல்லடி… பிளீஸ்’ என கெஞ்சினாள். அதன் பின்னர்தான் என மூளைக்குள் உறைத்தது. ஓ…இவளுக்குமோ…

இதற்குள் பஸ் வைத்தியசாலைக்கு கிட்டவாக வந்துவிட்டது. தரிப்பிடத்திற்கு கொஞ்சத்தூரம்தானேயென நின்றுவிட்டோம்.

பஸ் யாழ்.நகரை வந்தைடைந்தது. எல்லோரும் அடி பட்டு இறங்கினார்கள். கிடைத்த இடைவெளியை பயன்படுத்தி நானும் நண்பியும் ஒரு சீற்றோடு ஒதுங்கி விட்டோம். எமக்கு முன்னால் நிற்பவர்கள் இறங்க நாமும் இறங்க தயாரானபோது, ஒருவன் உரசிக் கொண்டு முன்னால் வந்து இறங்கினான். உரசியது மட்டுமில்லை.

திரும்பி ஒரு பயங்கர பார்வை. எமக்கு புரிந்து விட்டது. இவன் தான் அந்த காட்டுமிருகம் என்று. நாமும் இறங்கி மிகுதி காசிற்காக நிற்கும் பொழுது எமக்கு பின்னால் நின்ற இன்னும் சில இளம்ஆண்கள் எம்மை பார்த்து ஒரு மாதிரியாக சிரித்து விட்டு சென்றனர். இருவரும் குழம்பி விட்டோம்.

ஏன் இவர்கள் இப்படி சிரிக்கிறார்கள். ஒரு வேளை அந்த காட்டு மிருகத்தின் செயலை பார்த்திருப்பார்களோ. அதுதான் நக்கலாக சிரிக்கிறார்களோ. மறுபடியும் எனக்கு வெட்கமாக இருந்தது. அழுகை குமுறிக் கொண்டு வந்தது. நேரமும் நன்றாக ஏறியிருந்தது. மழை இருட்டு வேறு. கால் கை நடுங்க வேகமாக நடக்கின்றோம்.

இருவரும் வேறு வேறு பஸ் என்பதால் அவசரமாக தனது கதையை நண்பி சொல்கிறாள். ‘அடி எனக்கு பின்னால நின்று யாரோ என் காலை சுரன்டினது.

நான் தெரியாம முட்டுதாக்கும் நெருக்கம் தானே என்று அரக்கி அரக்கி நின்றன். கொஞ்ச நேரத்தில பின்பக்கமா எனக்கு நுள்ளிப்போட்டுதடி. ஒகே டி.. நான் போன்ல கதைக்கிறன். யோசிக்காம கவனமாக போ’ அவள் கூறி திரும்ப, நானும் எதேச்சையாக பின்னுக்கு திரும்பினேன். அந்த மிருகம் பின்னால் வந்துகொண்டிருந்தது.

இருவரும் திகைத்து விட்டோம். இப்படியான மிருகங்களின் வாசனையே எட்டக்கூடாதென சட்டென ஒதுங்கி விட்டோம். அவனிற்கு இதெல்லாம் சாதாரணம்போல. மீண்டும் புன்னாலைகட்டுவன் பஸ்ஸிற்கு போனான். பஸ்ஸிற்கு நின்ற பெண்களின் பின்னால் நின்றான். நாங்களும் ஒருவரை ஒருவர் கவனம் சொல்லி எங்கள் பஸ்ஸிற்கு சென்று விட்டோம்.

நிறைய பதற்றமாக இருந்தது. நல்லவேளையாக பஸ்சில் சீற் இருந்தது. உட்கார்ந்துவிட்டேன். நினைக்கவே பயமாக இருந்தது. அந்த மிருகத்தின் சீண்டல் அருவருப்பாக இருந்தது.

அம்மனை கும்பிட்டு என்னை நானே தேற்றிவிட்டு சீற்றில் சாய்ந்து கொண்டேன். பல்வேறு சிந்தனைகள். இப்படி இவனிடம் எத்தனை பெண்கள் சிக்குவார்கள். இவனுக்கு இதுதான் தொழிலாக இருக்குமோ. முன்பின் தெரியாத ஒரு பெண்னை சீண்டி அவர்களை துடிக்க விடுவதில் இவர்களுக்கு அப்படி என்ன சந்தோசம்.

இப்போ எதற்காக மீண்டும் அந்த பெண்களின் பின்னால் வந்த பஸ்சிற்கே திரும்பியும் போக நிற்கிறான். ஒருவேளை அந்த பெண்ணிலும் யாராவது மாட்டப் போகிறார்களோ. இவன் போல் இன்னும் எத்தனை பேரோ.. இப்படி எனக்குள் பல கேள்விகள்.

இந்த மிருகத்தை பார்க்க 30 வயது குறிக்கலாம். பெரும்பாலும் திருமணமும் செய்திருக்கும். அப்படியென்றால் மனைவி குடும்பம் என எத்தனை பேரை ஏமாற்றுகிறது. இவன் செய்யும் இந்த வேலைகள் நிச்சயம் இவன் மனைவிக்கு தெரிய போவதில்லை. இவனையும் இவனை போன்றவர்களையும் திருத்த வேண்டும் என்றால் அந்த இடத்திலேயே இவனுக்கு கடுமையான தண்டனை கொடுத்திருக்க வேண்டும். ஆனால் நாம் ஏன் அதை செய்யவில்லை?

இப்ப கூட ஒன்றும் கெட்டு போகவில்லை. இறங்கிப் போய் அவனுக்கு சரியான பாடம் படிப்பிக்கலாம் என்று தோன்றியது. ஆனால் சாட்சி இருந்தாலும் எடுபடாத எத்தனையோ விடயங்கள் எமது நாட்டில். என்னையும் நண்பியையும் நம்பி அவனுக்கு தண்டனை கொடுக்க எத்தனை பேர் முன்வருவர்? எங்களைத்தான் பிழை சொல்வார்கள். ‘இந்த நேரத்தில் எங்கே திரிகிறீர்கள்… பெண்பிள்ளைகள் வீட்டிலிருந்தால் பிரச்சனை வருமா’ என்பவர்கள்தான் பெரும்பாலானவர்கள். இப்படியான உலகத்தில் மௌனத்தை தவிர பெண்களிற்கு வேறுவழியென்ன? ஒவ்வொரு ஆணும் தனது மனச்சாட்சியோடு பேசித்தீர்க்க வேண்டிய விவகாரம் இது.