யாழில் போலீஸ் மற்றும் அதிரடிப்படையால் வலை வீசி தேடப்படும் காவாலிகள்

போரால் பாதிக்கப்பட்டு அனைத்தையும் இழந்த பின்பும் கல்வியையும் கலாசாரத்தையும் மட்டும் பற்றிக்கொண்டு எம் அடுத்த தலைமுறையாவது தலை தூக்கிவிடும் என்னும் நம்பிக்கையுடன் இயல்பு வாழ்விற்கு மெல்ல மெல்ல திரும்பிக்கொண்டிருக்கும் யாழ்குடாநாட்டில் தற்போது நிலவிவரும் அசாதாரண சூழ்நிலை போரை மிஞ்சிய பயத்தை எல்லோர் மனதிலும் விதித்துள்ளது.

கல்வியிலும் கலாசாரத்திலும் பெயரெடுத்த எம் சமுதாயம் வாள்வெட்டு ,கற்பழிப்பு ,கொலை ,கொள்ளை ,கட்டபஞ்சாயத்து என திசைமாறி செல்வதும் மீண்டும் பொலிஸாரும் படையினரும் வளைத்து வளைத்து பிடிக்க நாமே வழிசெய்து கொடுப்பதும் ஒட்டு மொத்த தமிழ் சமுதாயத்தையே தலை குனிய வைத்துள்ளது 

நடப்பவையெல்லாம் தென்னிலங்கை அரசியல் சமூகத்தினால் திட்டமிடப்பட்ட சதியா? அல்லது இளம் சமுதாயத்தினரிடம் சினிமா ,இணையம் போன்றவற்றினால் ஏற்பட்ட தன்னிச்சையான திசைமாற்றமா அல்லது சரியான தலைமையின் கட்டுப்பாடுகள் அகன்றதனாலும் , அதனால் ஏற்பட்ட பயக்குறைவினாலும் ஏற்பட்ட விளைவுகளா என ஆராய்ந்து சீர் செய்யும் முன்பே அடுத்தடுத்ததாக பல சம்பவங்கள் அரங்கேறி யாழ் குடாநாட்டையே உலுப்பிவிட்டன   

ஒட்டுமொத்த சமூக ஆர்வலர்களும் இவ்வாறான செயற்பாடுகளை பற்றி கருத்து தெரிவிக்கையில் இதற்கான மூலகாரணம் பெற்றோர் என்பதையே ஆணித்தரமாக எடுத்துரைக்கின்றனர் . பெற்றோரின் அக்கறையீனமும் பிள்ளைகள் மீதான கண்மூடித்தனமான நம்பிக்கையும் அதீத பணப்புழக்கமுமே இதற்கு காரணமாக அமைகின்றது என சுட்டிக்காட்டுகின்றனர் 

பரீட்ச்சையில் சித்தி பிறந்தநாள் என எதுவாக இருந்தாலும் பெண்பிள்ளைகளுக்கான அன்பளிப்பில் தொலைபேசியே முதல் இடம் பெற்றுவிடுகிறது . ஆபத்துக்கு தம்முடன் கதைக்க என வாங்கிக்கொடுக்கும் பெற்றோருக்கு தெரிவது இல்லை ஆபத்தே தொலைபேசிதான் என்று . இரவு நேரத்தில் போர்வைக்குள் ஒளிரும் தொலைபேசி வெளிச்சமே பலவீடுகளை இருளுக்குள் தள்ளிவிடுகிறது 

இளைய சமுதாய வாழ்வு பாதாளம் நோக்கி பயணிப்பதில் பாடசாலைகள் கல்வி நிறுவனங்களின் அதிபர் ஆசிரியர்களுக்கும் பெரும் பங்கு உள்ளது . அதிபர் அல்லது ஆசிரியன் மாணவனிடம் கண்டிப்பான அன்புடன் நடந்து கொள்வதற்கு பதிலாக இன்றய காலகட்டத்தின் நட்பு ரீதியான உறவுகளை பேணிவருகின்றனர் ,இதனால் மாணவர்களை கண்டிக்க முடிவதில்லை அல்லது கண்டிக்க விரும்புவதில்லை ஆசிரியர்களும் மாணவர்களுடன் இணைந்து கொச்சையான கதைகள் கதைப்பதும் பெண் மாணவிகளோடு சில்மிஷங்கள் செய்வது என ஆசிரியர் மாணவ உறவினை கெடுக்கின்றனர் 

கல்விநிறுவனங்களில் பாடம் முடிந்ததும் மற்றும் இடைநேரங்களிலும் வெளிசிற்றுண்டி கடைகளில் கூடும் மாணவர்கள் அக் கடைகளில் வாடிக்கையாகவுள்ள வளர்ந்த  காவாலி அண்ணன்மார்களுடன் உறவுகளை மேன்படுத்துதல் மாணவ சமுதாயத்தையே அச்சுறுத்தும் முக்கிய தொடக்கமாகும். 

சிறுசிறு காதல் விவகாரங்கள் நட்பு வட்டாரங்களுக்கு இடையிலான கட்டைப்பஞ்சாயத்து போன்றவற்றின் உதவிகளுக்காகவும் , அவர்களின் ஹீரோ பாணி மிரட்டல்களில் பிரமித்தும் அவர்களுடன் ஈர்க்கப்படும் மாணவர்கள் நாளடைவில் காவாலிகளின் கைக்கூலிகளாகவே மாறிவிடுகின்றனர் பின் கெத்துக்காகவும் ஸ்டைலுக்காகவும் புகைத்தல் மது அருந்துதல் சிறு பிணக்குகளுக்கு போதல் என தமது பாதையையே மாற்றி விடுகின்றனர்.

இரவு நேர தனியார் வகுப்புகளை ரத்து செய்தல் கல்வி நிறுவனங்கள் முன் கடைகளில் புகையிலை சிகரெட் போன்றவற்றை தடை செய்தல் என எவ்வித நடவடிக்கைகளையும் வட மாகாண சபையின் எவரும் முன்னெடுக்காதது வருத்தத்திற்கு உரியது 

சிறு சிறு தகராறு கட்டபஞ்சாயத்து மிரட்டலான தோற்றத்துடன் வேகமாக பைக்கில் சுற்றித்திரிவது பெண்களை கிண்டல் அடிப்பது என சிறிய அளவில் தென்பட்ட காவாலிகளின் முகம் குடா நாட்டயே பதட்டத்துக்குள் தள்ளி கொழும்பிலிருந்து அதிரடிப்படையை குவிக்கும் ஒரு ரவுடி கும்பலாக உருவெடுத்ததன் பின்னணி என்ன  என ஆராய்ந்தால் அதற்கான முதல் புள்ளி லீசிங் கொம்பனிகளில் இருந்தே ஆரம்பிக்கின்றது. 

படிப்பறிவோ அனுபவமோ தேவையில்லை ரவுடி தோற்றத்துடன் கொஞ்சம் கெட்டவார்த்தை  தெரிந்தால் போதும் கைநிறைய சம்பளத்துடனும் மிரட்டலான அதிகாரத்துடனும் வேலை கொடுத்து விடுகின்றன லீசிங் கொம்பனிகள்

வேலை நிமிர்த்தமாக மிரட்டல்களின்போது ஏற்படும் பயம் கலந்த மரியாதை ஒரு போதை போல் தலைக்கு ஏறிவிட வழி மாறி பிறந்த சில காவாலிகளின் பாதையை நன்றாகவே மாற்றிவிடுகிறது . இம் மிரடடல்கள் நடப்புகளிற்கான வக்காளத்து சண்டைகளிலும் அயல் வீட்டு சண்டைகளிலும் கட்டைப்பஞ்சாயத்துக்களிலும் தலை தூக்க எதிரணியின் பயம் இவர்களின் அசாத்திய துணிச்சலை நன்றாகவே வளர்த்து விடுகிறது 

இவர்களுடன் ஈர்க்கப்படும் ஒருகூட்டம் இணைந்து அனைத்து தருதலைகளும் தமக்கான ஒரு தலையையும் தம் கூடடத்திற்கு பெயர் ஒன்றையும் உருவாக்கி ரவுடி கும்பலாக உருமாறுகின்றன