பொருட்களை பதுக்கிய வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

டின்மீன் மற்றும் பருப்பு போன்றவற்றை கூடிய விலையில் விற்பனை செய்த ஆறு வியாபார நிலையங்களுக்கு எதிராகவும் பொருட்களை பதுக்கிய வர்த்தகர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் பொறுப்பதிகாரி ச.நிலாந்தன் தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள் பாவனையாளர்களின் நலன் கருதி மாவட்டத்தின் பல பாகங்களிலும் அத்தியாவசிய பொருட்கள் நியாயமான விலையில் விற்பனை செய்யப்படுகின்றதா என்பது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் பின்னரே இவ்வாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றதா என்பதை கண்காணிப்பதுடன் கூடிய விலையில் விற்பனை செய்யும் வியாபார நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளோம்.

கடந்த மூன்று தினங்களில் பருப்பு, டின்மீன் போன்றவற்றை கூடிய விலையில் விற்பனை செய்த ஆறு வியாபார நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் பொருட்களை பதுக்கும் செயற்பாடுகளும் இடம்பெற்று வருகிறது.

அத்தகைய இரண்டு வர்த்தக நிலையங்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை வர்த்தகர்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்துவதை தவிர்த்து பொதுமக்களின் நலன் கருதி மனிதநேயத்துடன் தமது வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வர்த்தகர்களை கேட்டுக் கொள்கின்றோம்.

அத்துடன் பொதுமக்கள் தங்களது முறைப்பாடுகள் ஏதும் இருப்பின் வவுனியா மாவட்ட பாவனையாளர் அதிகார சபையின் 024 – 22 28 932 என்ற இலக்கத்திற்கு அல்லது அவசர இலக்கமான 1977 என்ற இலக்கத்திற்கோ தகவலை வழங்குமாறு கேட்டுக்கொள்வதாக மேலும் தெரிவித்தார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *