கிளிநொச்சியில் உள்ள அறிவகத்தில் சம்பந்தன் தலைமையில் கூடும் இலங்கை தமிழரசுக்கட்சி!

இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியில் உள்ள அக்கட்சியின் மாவட்ட கிளைக்காரியாலயமான அறிவகத்தில் பத்து மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெறுகின்ற இக்கூட்டத்தின் போது ஜெனீவா தீர்மானத்திலிருந்து அரசாங்கம் முழுமையாக வெளியேறுகின்றமை மற்றும் பாராளுமன்ற தேர்தலுக்கு முகங்கொடுப்ப பற்றிய வியூகங்கள் தொடர்பில் ஆராயப்படவுள்ளது.

இதனையடுத்து நண்பகலுடன் மத்திய குழுக்கூட்டம் நிறைவடையவுள்ளதோடு மாலை 5மணிக்கு பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்கள் நியமனம் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இதன்போது மாவட்ட ரீதியாக தமிழரசுக்கட்சியின் வேட்பாளர் பட்டியல்கள் பெரும்பாலும் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் யாழ், வன்னி, மட்டக்களப்பு, திருமலை ஆகிய மாவட்டங்களில் தமிழரசுக்கட்சியின் ஊடாக இளம் புதிய முகங்களுக்கு வாய்ப்புக்கள் வழங்கப்படுவது தொடர்பில் தமிழரசுக்கட்சியின் தலைமை ஆராய்ந்து வருவதாக அறியமுடிகின்றது.

இதேவேளை, இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரான சம்பந்தன் தேர்தல் களத்தில் களமிறங்காது தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு பிரசன்னமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *