யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் பாரிய மோசடி! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

யாழ்ப்பாணத்தில் மோசடியான முறையில் பணம் பறிக்கும் கும்பல் ஒன்று செயற்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளாத மர்மநபர்கள் eZ Cash மூலம் பலரிடம் பெருந்தொகை பணத்தை ஏமாற்றியுள்ளனர்.

சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரிடம் eZ Cash மூலம் 25 ஆயிரம் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளது.

வீதி போக்குவரத்து விதிமுறைகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரியே இவ்வாறு ஏமாற்றப்பட்டுள்ளார்.

குறித்த அதிகாரியை தொடர்பு கொண்ட மர்ம நபர், தன்னை யாழ். மாவட்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் என அறிமுகம் செய்துள்ளார்.

“எனக்கு அவரசமாக 25 ஆயிரம் ரூபா பணம் தேவை. தற்போது வீதி போக்குவரத்து கடமையில் உள்ளதால் அருகிலுள்ள eZ Cash நிலையம் ஊடாக பணத்தை அனுப்புமாறு ” கோரியுள்ளார்.

அவரும் உண்மையென நம்பி குறித்த இலக்கத்திற்கு 25 ஆயிரம் ரூபாவை அனுப்பி வைத்துள்ளார். எனினும் பொலிஸ் நிலையம் சென்று சம்பவம் தொடர்பில் பொறுப்பதிகாரியிடம் கூறிய போதே தான் ஏமாற்றப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது.

மோசடி சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் தகவல் தருகையில்,

“இந்த மோசடி கும்பல்கள் பெருந்தொகை பணத்தினை மோசடி செய்வதனை தவிர்த்து 10 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை மோசடி செய்கின்றனர். இவ்வாறான தொகைக்கு பெரும்பாலனவர்கள் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்வதற்கு தயக்கம் காட்டுகின்றனர். சிலர் முறைப்பாடுகள் செய்கின்றனர்.

அவர்களின் முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்தால், சம்பந்தப்பட்ட தொலைபேசி இலக்கங்கள் பதிவில்லாமல் இருக்கும். அல்லது சிறைச்சாலையில் தண்டனைக் கைதிகளாக உள்ளவர்களின் பெயர்களில் இருக்கும் அல்லது உயிரிழந்த நபர்களின் பெயர்களில் இருக்கும். அதனால் எமது விசாரணைகள் தடைப்பட்டு விடும்.

மோசடி நபர்களை நெருங்குவதில் தடைகள் உண்டு. அதேவேளை இவர்கள் மோசடியாக பெறும் பணத்தின் தொகை சிறிதாக இருப்பதனாலும் விசாரணைகளில் சில சிக்கல்கள் உண்டு.

இது தொடர்பில் பொதுமக்கள் விழிப்பாக இருந்தால் மாத்திரமே இவ்வாறான மோசடி கும்பல்களில் இருந்து தப்பிக்க முடியும். தெரியாத நபர்கள் , புதிய தொலைபேசி இலக்கங்களில் இருந்து வரும் அழைப்புக்களை நம்பி அவர்களுக்கு பணம் செலுத்தாதீர்கள்.

அதேவேளை அதிஸ்டம் விழுந்துள்ளது என வரும் குறுந்தகவல்கள் குறித்தும் கவனமாக இருங்கள். அவற்றை நம்பியும் பணம் செலுத்தாதீர்கள். அது தொடர்பிலும் விழிப்பாக இருங்கள். அவ்வறான குறுந்தகவல்கள் குறித்து , தொலைத்தொடர்பு வலையமைப்பின் வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொண்டோ அல்லது அருகில் உள்ள அவர்களின் சேவை நிலையங்களுக்கு சென்றோ உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தொலைபேசி ஊடாக மோசடி செய்யும் நபர்களிடம் இருந்து தப்பிக்க மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்” என தெரிவித்தனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *