நாடாளுமன்ற தேர்தலின் பின்பே வேலை வாய்ப்புக்கள் வழங்கப்படும் : டக்ளஸ் தேவானந்தா

எதிர்வரும் மாதம் அளவில் வேலை வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று காலை 10 மணியளவில் மக்கள் சந்திப்பு இடம் பெற்றது.

இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது க.பொ.த.சாதாரண தரத்திற்கு கீழ் உள்ள கல்வித் தகமையை கொண்டவர்களுக்கே எதிர் வரும் மாதம் அளவில் வேலை வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

அதற்கான பதிவுகளும் தற்போது இடம் பெற்று வருகின்றது.

மேலும் க.பொ.த.சாதாரண தரத்திற்கு மேல் உள்ள கல்வித் தகமைகளை கொண்டவர்களுக்கான வேலை வாய்ப்புக்களை வழங்க எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் பின்பே அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

எனவே யாரும் தற்போது நம்பி ஏமாற வேண்டாம். இது தான் யதார்த்தம். இது தான் நடக்கவும் இருக்கின்றது.

எனவே க.பொ.த.சாதாரண தரத்திற்கு மேல் உள்ள கல்வித் தகமைகளை கொண்டவர்கள் உங்களின் கோரிக்கை கடிதத்துடன் சுய விபர கோவையை சமர்ப்பிக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குறித்த மக்கள் சந்திப்பின் போது வேலை வாய்ப்பு, மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள், சுய தொழில் மேற்கொள்வோர் எதிர் நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *