நந்திக்கடல் தொடர்பில் அவதானம் செலுத்தும் டக்ளஸ்!

முல்லைத்தீவு நந்திக்கடல் உட்பட வன்னிப் பிரதேச களப்புக்களை அபிவிருத்தி செய்து நன்னீர் மீன்வளர்ப்பிற்கு ஏதுவான சூழலை எற்படுத்துவன் மூலம் பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தினை வலுப்படுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தீவிர கவனம் செலுத்தி வருகின்றார்.

கழிவுப் பொருட்கள் தேங்கிக் கிடப்பதாகவும் சுனாமியின்போது கரையொதுங்கிய மணல் திட்டுக்களினால் நந்திக்கடலின் ஆழம் குறைந்துள்ளமையினாலும் நன்னீர் மீன்பிடி பாதிக்கப்பட்டிருப்பதாக பிரதேச மக்களினால் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பாக நந்திக்கடல் பிரதேசத்தினை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான மதிப்பீடுகள் மற்றும் சட்டநடைமுறை தொடர்பான அனுமதிகளை உடனடியாக பெற்று அபிவிருத்தி நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அமைச்சரினால் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியின் போது வெளியிடப்பட்ட இயற்கை வளப் பாதுகாப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்கள் சில நந்திக்கடல், சுண்டிக்குளம், நாயாறு, விடத்தல்தீவு போன்ற பிரதேசங்களில் நன்னீர் மீன்வளர்ப்பு அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இடையூறாக இருக்கின்றன.

தற்போது இலங்கையின் மொத்த மீன் உற்பத்தியில் 18 வீதமாக இருக்கின்ற நன்னீர் மீன்பிடியை 30 வீதமாக உயர்த்துவதற்கு அமைச்சர் டக்ளஸ் தலைமையினாலான அமைச்சினால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நன்னீர் மீன் உற்பத்தியில் ஜனாதிபதி ஆர்வம் செலுத்தி வருகின்ற நிலையிலும் இயற்கை வளப் பாதுகாப்பு தொடர்பான குறித்த வர்த்தமானி அறிவித்தல்களினால் உருவாக்கப்பட்டுள்ள இடையூறுகளை சுமூகமாக தீர்த்து கொள்வது தொடர்பாகவும் சில பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டு ஆலோசிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *