வடமாகாண பட்டதாரிகள் மனிதவள அபிவிருத்தி நிறுவனம் உருவாக்கம்

அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்திற்கான பட்டதாரிகள் மன்றம் என்று இயங்கி வந்த நிறுவனமானது வடமாகாண பட்டதாரிகள் மனிதவள அபிவிருத்தி நிறுவனமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என அந் நிறுவனத்தின் தலைவர் ம.ஆனந்தராஜா தெரிவித்துள்ளார்.

இன்று அவர் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த அறிக்கையில்,

வவுனியா நகர மண்டபத்தில் அண்மையில் அரச நியமனம் கிடைக்கப்பெறாத வடமாகாண பட்டதாரிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இதன்போதே குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

யாழ்.பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் மோகனதாஸ் வழிகாட்டலில் பட்டதாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் வடமாகாணத்தில் எதிர்வரும் காலங்களில் உதயமாகி புதிய நிறுவனத்தினூடாக அனைத்துப் பட்டதாரிகளின் ஒத்துழைப்புக்களுடன் பாரிய அபிவிருத்தி சார்ந்த வேலைத்திட்டங்களில் பங்காற்றுவதுடன் வடமாகாணத்திலுள்ள அரச நியமனம் இதுவரை காலமும் கிடைக்கப்பெறாத மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகளுக்கு அரச தொழில்வாய்ப்பை அரசாங்கத்தினூடாக ஏற்படுத்திக்கொடுக்கும் தொழில்முறை சார்ந்த செயற்பாட்டிற்கு முன்னுரிமை அடிப்படையில் சேவையாற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம் எதிர்வரும் ஒரு மாத காலத்திற்குள் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் வடமாகாணத்திலுள்ள அனைத்துப் பட்டதாரிகளையும் ஒருங்கிணைத்து பட்டதாரிகள் மனித வள அபிவிருத்தி மாநாடு நடத்துவதற்கு ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இம்மாநாட்டிற்கு அரசாங்கத்தின் நிர்வாக ரீதியிலான அதிகாரிகளான வடமாகாண ஆளுநர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர்களை அழைப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

வடமாகாண பட்டதாரிகள் மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவராக ம.ஆனந்தராஜா, செயலாளராக த.ரஜனிக்காந், பொருளாராக ச.பார்த்தீபன், சிரேஷ்ட பிரதித்தலைவராக பெ.புவனேந்திரன், போசகராக போராசிரியர் மோகனதாஸ், ஆலோசகராக கே.கமலநாதன் ஆகியோரும் செயற்படுவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பிரதிநிதிகளும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *