வடக்கில் பல பாடசாலைகள் மூடப்படும் அபாய நிலை

பெற்றோர்களின் பங்களிப்பு இன்மையால் வட மாகாணத்தில் பல பாடசாலைகள் மூடப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியா, புதுக்குளம் கனிஷ்ட வித்தியாலயத்தின் சாதனை மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

இன்று பல பாடசாலைகளில் பெற்றோரின் ஒத்துழைப்பின்றியும், தமது கிராம பாடசாலைகளில் மாணவர்களை சேர்க்காமையினாலும், மூடப்படுகின்ற நிலை உள்ளது.

35இற்கு உட்பட்ட மாணவர்கள் இருந்தால் பல பாடசாலைகள் மூடப்படகின்ற நிலை எமது வட மாகாணத்தில் இருக்கின்றது. அருகில் உள்ள பாடசாலைகளுடன் இணைந்து இயங்குகின்ற நிலைமையும் காணப்படுகின்றது.

இலங்கையில் இருக்கின்ற அரசியல் சூழ்நிலை எமது இருப்பு தொடர்பில் நாம் தனித்து வாழ முடியுமா என்ற கேள்விக்கு அப்பால் எமது மாணவர்களின் சாதனைகளே எங்களை ஓரளவு நிம்மதியை கொடுக்கின்றது.

மாணவர்களது வெற்றிகளும், சாதனைகளுமே அரசியல் ரீதியான இருப்புக்கும் பக்கபலமாக அமையும் என்பதே உண்மை.

பாடசாலையில் சிறுபராயத்தில் சாதனை படைத்துவிட்டு பல்கலைக்கழகம் சென்று பட்டங்களை பெற்ற பின்னர் பலர் தமது ஆரம்ப பாடசாலைகளையும், ஆசாரிகளையும் மறந்து விடுகின்றோம்.

இன்று வட மாகாணத்தில் பெயர் சொல்லக்கூடியவர்களாகவும், கல்விமான்களாகவும் இருக்கின்றவர்கள் தமது ஆரம்பக் கல்வியை ஒரு பாடசாலையில் சாதாரண ஆசிரியரிடம் தான் கற்றிருப்பார்கள்.

அந்த ஆசிரியர்களே ஒரு மாணவன் எதிர்காலத்தில் எவ்வாறு வரப்போகின்றார் என்று அவனை பூரணப்படுத்துவதில் மிகப்பெரிய பங்கை ஆற்றுகின்றார்.

அந்தவகையில் புதுக்குளம் கனிஷ்ட வித்தியாலயமும் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளதுடன் பல சாதனை மாணவர்களையும் உருவாக்கியுள்ளது.

அந்தவகையில், இப்பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *