தமிழர் பிரதேசங்களில் அபரமித அபிவிருத்திகள் – அதுவே இலக்கு என்கிறார் ஜனாதிபதி கோதா

தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற பிரதேசங்களில் அபரமிதமான அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்படும், தமிழர் பிரதேசங்களில் அபிவிருத்திகளை முன்னெடுப்பதில் எந்த பிரச்சினைகளும் இல்லை, தமிழர்களுக்கு அபிவிருத்திகளை செய்ய வேண்டாம், உத்தியோகம் கொடுக்க வேண்டாம் என்று சிங்களவர்கள் சொல்லவே மாட்டார்கள் என்று இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டு சென்ற ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஸ இந்து பத்திரிகைக்கு தெரிவித்தார்.

இவர் இவ்விசேட பேட்டியில் முக்கியமாக தெரிவித்துள்ளவை வருமாறு.

அபிவிருத்தி என்பது வேறு. அரசியல் விடயம் என்பது வேறு. தமிழ் மக்களுக்கு அபிவிருத்திகள், தொழில் வாய்ப்புகள் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்பதில் நான் முனைப்புடன் உள்ளேன். சிங்கள மக்களுக்கு அதற்கு எதிரான உணர்வு கிடையாது.

ஆனால் அரசியல் விடயம் தொடர்பாக வேறு விதமான உணர்வும், விருப்பமுமே அவர்களுக்கு உள்ளன. அதனால்தான் அரசமைப்பின் 13 ஆவது திருத்த சட்டம் மூலம் 1987 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மாகாண சபைகள் முறைமையை முழுமையான வகையில் இன்னமும் அமுல்படுத்த முடியாமல் இருக்கின்றது.

தேசிய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விடயத்தில் இந்தியாவின் பங்களிப்புகளை இன்னும் அதிகம் எதிர்பார்க்கிறேன். குறிப்பாக இஸ்லாமிய தேசத்திடம் இருந்து இலங்கைக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு பின்னால் இஸ்லாமிய தேசம் உள்ளது. அதனால் நாம் பாதுகாப்பு விடயத்தில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டி உள்ளது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கடந்த காலங்களில் ஏற்பட்டு இருக்க கூடிய தப்பான அபிப்பிராயங்களை களைய வெளிப்படையாக செயற்படுவதற்கு தயாராக உள்ளேன். இலங்கை மீதான சீனாவின் முதலீடுகளுக்கு மாற்றீடு வேண்டும் என்று விரும்பினால் இந்தியா அடங்கலாக இப்பிரந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகள் இலங்கை மீது கூடுதலான முதலீடுகளை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.

நாம் இந்தியாவுடன் மிக நெருக்கமான உறவுகளை பேண விரும்புகின்றோம். சீனா, பாகிஸ்தான் ஆகியவற்றுடனான உறவு இதற்கு ஒரு தடையாக இருக்க போவதே இல்லை. இந்திய தரப்புக்கு சந்தேகம் ஏற்படாத வகையில் அந்த நாடுகளுடனான உறவுகள் இருக்கும். எந்த பிரச்சினைகளும் நேராது.

இந்தியாவுடன் சீரான உறவை பேண வேண்டியது அவசியமானது. இந்தியாவுக்கு இலங்கையில் சாத்தியமான, சாத்தியம் அற்ற வேலை திட்டங்கள் குறித்த தெளிவு நிலை வேண்டி உள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இது தொடர்பாக மேலும் விரிவாக பேசுவேன் என்று நம்புகின்றேன்.

அதிகாரம் பாராளுமன்றத்திடம் இருக்க வேண்டுமா? அது மாற்றப்பட வேண்டுமா? என்று பார்க்கின்றபோது அது குறித்து கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட வேண்டி உள்ளன. ஆனால் அரசமைப்பின் 19 ஆவது திருத்தம் தோல்வியானது என்பது நிரூபணமாகி உள்ளது. அது நீக்கப்பட வேண்டும்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *