தேர்தலில் தமிழர்களது தந்திரோபாயத் தெரிவு எது?

எமது இனத்தின் இருப்பிற்கான போராட்டத்தில் இன்னொரு தீர்மானகரமான தருணத்தில் நாம் இருக்கிறோம். இவ்வேளையில் நாம் எமது தலைவர் காட்டிய தந்திரோபாய வழியில் செல்லப்போகிறோமா அல்லது தரகுப் பணத்திற்கு விலைபோனவர்கள் காட்டும் பாதையில் போய் பாடை ஏறப்போகிறோமா என்பதை தீர்மானிக்க வேண்டிய இறுதிக் கணப்பொழுதுகள் ஆரம்பமாகிவிட்டன.

தாம் கட்டி வளர்த்த விடுதலை இயக்கத்தையே தற்கொடையாக்கி தமிழரது இருப்பிற்கான போராட்டத்தை சர்வதேசமயப்படுத்தும் தீர்க்க தரிசனத்துடன் தந்திரோபாயரீதியில் தலைவர் அவர்களால் எடுக்கப்பட்ட முடிவே 2005ஆம் ஆண்டின் பொதுத் தேர்தல் புறக்கணிப்பு முடிவாகும்.. இதன் விளைவாக சிங்களதேசமானது தான் பின்னிய சர்வதேச வலைப்பின்னலில் தானே வசமாகச் விழுந்து சிக்குண்டு திணறியது. சர்வதேச போர்க்குற்ற விசாரணை, சர்வதேச மனித உரிமை ஆணையகத்தின் கிடுக்கிப் பிடி எனச் சிக்கிச் சின்னாபின்னப்பட்ட சிங்களக் கொள்கை வகுப்பாளர்களது மூளையில் உதித்த தப்பும் உபாயமே 2015ல் உருவான ‘நல்லாட்சி’ அரசு.

இந்த ‘நல்லாட்சிப்’ பொறியின் அர்த்தம் புரியாமல் சாணக்கியர்களாகத் தம்மை தாமே மார்தட்டிக்கொள்ளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தாமும் மாட்டி எம் இனத்தையும் மாட்டிவிட்டது. தீபாவளிக்கும் பொங்கலுக்கும் தீர்வு வருவதற்காகக் ‘கருமங்கள் நடக்குதெனக்’ கதைவிட்டே அவர்கள் காலத்தை நீட்டினர். கிடைத்த சந்தர்ப்பத்தை சிறப்பாக பயன்படுத்தி கூட்டமைப்பைப் பிணைக்கு வைத்தே தன் பிணை மீண்டது சிங்களம். மகிந்தரின் காலத்தில் தேடி வந்த சர்வதேசம் நல்லாட்சியில் கணக்கேஎடுக்காமல் கைகட்டி இரசிக்கிறது. நல்லாட்சி தமது சொல் கேட்டு ஆட்சி செய்வதால் சர்வதேசத்திற்கு நாம் வேண்டாப் பொருளானோம். சிங்களமோ ‘மனித உரிமைகள் பேரவை, சர்வதேச நீதி விசாரணை எல்லாம் தேவையில்லை’ என கூட்டமைப்பைக் கொண்டே சொல்ல வைத்து பொறியிலிருந்து தப்பியது.

இப்பொழுது காலம் எமக்கென மீண்டும் ஒரு வாய்ப்பைத் தர வாசல் தேடி  வந்துள்ளது. மீண்டும் சிங்களத்தை சிக்கலில் மாட்டி அவலத்தைத் தந்தவனே அதற்குத் தீர்வைத் தர வைக்க வாய்த்த ஒரு அரிய தருணம் சிங்களத்தைச் சர்வதேச வலையில் மீண்டும் மாட்டுவதற்கு வந்த பொன்னான சந்தர்ப்பம் அதனால் மீண்டும் கூடிய சிங்களக் கொள்கை வகுப்பாளர் துல்லியமாகத் திட்டமிட்டு காய் நகர்த்துவது துலாம்பரமாகத் தெரிகிறது. தலைவரே குறிப்பிட்ட ‘குள்ள நரி’ ரணிலாரின் தலைமையில் சிங்களப் பேரினம் தமக்கெனக் காத்திருக்கும் சர்வதேச வலையினை எம்மை வைத்தே அறுக்க முயல்கிறது.

கோட்டாபய வென்றால் சர்வதேசம் அவரை அடக்க தமிழரை அணைக்கும். தமது வெற்றி நாயகர்களை போர்க் குற்றவாளிகளாக்கும் என்பதை நன்கறிந்த சிங்களம் நசூக்காக காய் நகர்த்துகிறது. ‘சமாதான தேவதை’ நவாலியில் நரபலி எடுத்ததை நாம் மறந்தே போனோம் என்றெண்ணி தலைவரை ‘சேர்’ என்று விளித்து எமக்கு ‘வாளி’ வைக்கிறது.

1977லிருந்து 2015 வரை சிங்களம் நடாத்திய தமிழினப் படுகொலைகள் பலநூறு. அவற்றில் வரலாற்றில் பதிந்த பாரிய படுகொலைகள் 77. இப் படுகொலைகளில் 55 படுகொலைகள் ஐக்கிய தேசியக் கட்சியின் (அல்லது ஐக்கிய தேசிய முன்னணி) அரசாட்சியின் போதும், 22 சுதந்திரக் கட்சியின் (அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி) அரசாட்சியின் போதும் நடந்தேறியவை.. ‘மகிந்தர்  காலத்தில் நடந்தவை மட்டுமே படுகொலைகள் தமது காலத்தில் தமிழர்கள் தன்னிறைவோடு வாழ்ந்தார்கள்’ என்பது போல ரணில்- சந்திரிகா கூட்டணி பரப்புரை செய்கிறார்கள். தமது காலத்தில் நடந்த தமிழினப் படுகொலைகளை மறைந்து மகிந்தர் காலத்தில் மட்டும் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது போல முதலைக்கண்ணீர் வடிக்கிறார்கள். கூட்டமைப்பினரோ மகுடிக்கு நாகம் படம் விரித்து ஆடியது போல அதற்கு ஒத்து ஆடுகிறார்கள்.

அதாவது சிங்களம் தனக்காகக் காத்திருக்கும் சர்வதேச பொறியிலிருந்து தப்பிக்க மீண்டும் ஒரு முறை எம்மையே பயன்படுத்த முயல்கிறது. வலிய வந்து மாட்டியுள்ள கோட்டபயாவை நாம் கோட்டை விட வைப்பதற்கே சிங்களம் எம்மைத் தூண்டுகிறது

ஆட்களைக் கடத்திக் காணாமல் ஆக்குவதில் உலகிலேயே இலங்கை இரண்டாவது இடத்தில் இருப்பதாக ஐ.நா சபை 1999ம் ஆண்டிலேயே கூறியிருக்கிறது. இவ்வருட ஐ.நா மனித உரிமை ஆண்டறிக்கையோ 2016 ற்கும் 2018 ற்கும் இடையில் ஆட்கடத்தல் நடந்ததது குறித்த நம்பகமான தகவல்கள் தமக்கு கிடைத்துள்ளதாக குறிப்பிடுகிறது. ‘வெள்ளை வான்’ என்பது இலங்கையின் படைப் புலனாய்வுக் கட்டமைப்பின் ஒரு கருவி. அரசாங்கங்கள் மாறினாலும் படைக்கட்டமைப்பு தனது பாரம்பரியத்தை மாறாது தொடர்வதே வரலாறு. இவை இப்படி இருக்க ‘வெள்ளை வான்’ என்பது ஏதோ ‘கோட்டபயாவுடன் கூடப் பிறந்த ஒன்று’ போல எல்லோம் எங்களுக்குப் பூச்சாண்டி விடுகிறார்கள்.

இங்கே தான் சிங்களத்தின் குள்ள நரித்தனத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மீண்டும் சர்வதேசம் எமது காலடிக்கு வரவேண்டுமா அல்லது நாம் கால் துண்டு நிலம் இல்லாது அழிந்து போக வேண்டுமா? தலைவரது தீர்க்கதரிசனத்தின் படி சிங்களத்தைச் சர்வதேச வலையில் விழ வைக்கப் போகிறோமா அல்லது எமது இருப்பிற்கு நிரந்தரமாகவே உலை வைக்கப்போகிறறோமா. சஜித் பிரேமதாசாவை தெரிவு செய்து எமது பிணத்தை கூட புதைக்க நிலம் இல்லாது கடலில் வீசப் போகிறோமா அல்லது கோட்டபயாவைத் தெரிவு செய்து சிங்களத்தை சிக்கலில் மாட்டி எமக்கான தீர்வினை எடுக்கப் போகிறோமா?

ஒவ்வொரு தமிழனும் சிந்திக்க வேண்டிய தருணம்.நாம் முடிவெடுக்க வேண்டிய தருணம்.

தமிழினப் படுகொலைகளும் ஆட்சியாளர்களது காலப்பகுதிகளும்


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *