அது என்னால் மட்டுமே சாத்தியப்படும்! பெருமிதம் வெளியிட்ட கோத்தபாய ராஜபக்ச
தேசிய பாதுகாப்பு குறித்து கரிசனைகொண்டு செயற்பட்ட புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் பேசுவதற்கும் தற்போதைய அரசாங்கம் இடமளிக்கவில்லை என ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்நிலையில், நாட்டில் மீண்டும் குண்டுகள் வெடிக்காத படி சமாதானமான நிம்மதியான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கு தனக்கே முடியும் என்றும் அவர் பெருமிதம் வெளியிட்டுள்ளார்.
இன்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“தேசிய பாதுகாப்பு மீது விசேட அவதானம் செலுத்தியுள்ளோம். யுத்தத்தை முடிவுறுத்தி மீண்டும் தீவிரவாதம் தலைதூக்காமலிருக்கும் வகையிலான வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்திருந்தோம்.
விசேடமாக நாட்டின் முப்படையினர், பொலிஸார் மற்றும் புலனாய்வுப் பிரிவினரை உள்ளடக்கி மக்களுக்கு சமாதானத்தை ஏற்படுத்தியதோடு அது சீர்குலையாதபடியும் பார்த்துக்கொண்டோம்.
ஆனால் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் தேசிய பாதுகாப்புக்கு முதன்மை அளிக்கவில்லை. தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கருத்துக்கூறவும் இடமளிக்கப்படவில்லை.
மீண்டும் போர்க்காலத்தை உருவாக்குவதாகக்கூறி புலனாய்வுப் பிரிவுகளுக்குப் பணிசெய்யம் இடமளிக்கவில்லை. ஒருநாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருந்தால் அதுதொடர்பாக முதலில் அரசாங்கத்துக்கு தெரியப்படுத்துவது இவர்கள்தான்.
ஆனாலும் புலனாய்வு அதிகாரிகளை சிறையிலடைத்தது மட்டுமன்றி போதைப்பொருள் கடத்தல்காரர்களை, பாதாள உலகக் கும்பலை கட்டுப்படுத்திய அதிகாரிகளுக்குப் பின்னால் தூரத்திச்செல்ல அரசாங்கம் ஆரம்பித்தது.
சிறைச்சாலை அதிகாரிகள், முப்படையினர், பொலிஸாரை இலக்குவைத்தார்கள். இந்த அரசாங்கம் இராணுவர், பொலிஸாரை மானபங்கப்படுத்தியது. அதனால்தான் மீண்டும் இந்த நாட்டில் குண்டுகள் வெடித்தன.
எனினும் சிங்களம், தமிழ், முஸ்லிம் மக்களுக்கு சமாதானமாக வாழக்கூடிய நிலையை எம்மால் மட்டுமே ஏற்படுத்த முடியும் என்பதைத் தெரிவிக்க விரும்புகின்றேன்” என அவர் மேலும் கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.