35 ஆவது அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டி- சாதனைகளை நிலைநாட்டிய வடக்கு கிழக்கு மாணவர்கள்!

கிழக்கு மாகாணம் சார்பாக 14 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான குண்டெறிதல் போட்டியில் பங்குபற்றிய மட்டக்களப்பு அன் நூர் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த ஏ. ஆர். ஏ. அய்மன் புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.

35 ஆவது அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டிகளில் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கின் 200 மீற்றர் பயிற்சி அரங்கப் பகுதியில் இன்று காலை நடைபெற்றது.

இதில் 14 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான குண்டெறிதலில் 15.03 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து ஏ. ஆர். ஏ. அய்மன் புதிய சாதனை நிலைநாட்டினார்.

 

மருதானை புனித சூசையப்பர் கல்லூரி சார்பாக 2017இல் நவீன் விஸ்வஜித்தினால் நிலைநாட்டப்பட்ட 13.55 மீற்றர் என்ற தூரத்தை 1.48 மீற்றர் தூரம் அதிகமாக வீசியே ஏ.ஆர்.ஏ. அய்மன் புதிய சாதனையை ஏற்படுத்தினார்.

இதேவேளை கிழக்கு மாகாணம் சார்பாக ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் பங்குபற்றிய கிண்ணியா மத்திய கல்லூரியைச் சேர்ந்த எச். எம் ரிஹான் 58.86 மீற்றர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

இந்த நிலையில் கோலூன்றிப் பாய்தலில் வட மாகாணத்துக்கு தங்கத்துடன் இரண்டு வெள்ளிகள் 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வட மாகாணத்துக்கு தங்கப் பதக்கம் ஒன்றும் இணை வெள்ளிப் பதக்கங்களும் கிடைத்துள்ளமை பெரு மகிழ்ச்சியிஅனை ஏற்படுத்தியுள்ளது.

இப் போட்டியில் அளவெட்டி அருணோதயா கல்லூரியின் எஸ். திசாந்த் 4.30 மீற்றர் உயரம் தாவி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

இதேவேளைஎஸ். திசாந்த் கடந்த வருடமும் இதே நிகழ்ச்சியில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.

அத்துடன் கனிஷ்ட தேசிய மெய்வல்லநர் போட்டியில் 4.40 மீற்றர் உயரம் தாவி புதிய போட்டி சாதனை நிலைநாட்டிய சாவகச்சேரி இந்து கல்லூரியைச் சேர்ந்த ஏ.பவிதரன் 4.10 மீற்றர் உயரம் தாவி வெள்ளிப் பதக்கத்தை வெல்ல, அவருடன் அருணோதயா கல்லூரியின் வி.ருஷானும் அதேஅளவு உயரத்தைத் தாவி வெள்ளிப் பதக்கத்தை பகிர்ந்துகொண்டனர்.

14 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உயரம் பாய்தலில் இப்பாகமுவ கோனிகொட மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த கெத்மினி குமாரி ஹேரத் 1.53 மீற்றர் உயரம் தாவி, கடந்த வருடம் லைசியம் சர்வதேச பாடசாலையைச் சேர்ந்த லஹிருனி டி ஸொய்சாவினால் ஏற்படுத்தப்பட்ட சாதனையை சமப்படுத்தினார்.

இப் போட்டியில் பன்னிப்பிட்டி தர்மபால வித்தியாலயத்தின் ரொமிந்தி கீகியனகே (1.49 மீ.) வெள்ளிப் பதக்கத்தையும் இதே உயரத்தைத் தாவிய தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியைச் சேர்ந்த எஸ். சுவர்ணா, வெண்ணப்புவை திருக்குடும்ப கன்னியாஸ்திரிகள் மட பாடசாலையின் தினேத்மா ஜயசிங்க ஆகியோர் சம வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *