நீண்ட காலமாக பல குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த இளைஞன் யாழில் கைது

யாழ்ப்பாணம் மாநகர் உள்ளிட்ட பகுதிகளில் நீண்ட காலமாக வழிப்பறிக் கொள்ளைகளில் ஈடுபட்டுவந்த இளைஞன் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது உடமையிலிருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணம், இராசாவின் தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஜமேசன் அஜந்தன் (வயது 21) என்ற இளைஞனே நேற்று (15) கைது செய்யப்பட்டார்.

வழிப்பறிக் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார் என்ற குற்றச்சாட்டில் பல முறைப்பாடுகளின் கீழ் இளைஞனை பொலிஸார் தேடி வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் கைக்குண்டு ஒன்று மீட்டதாகத் தெரிவிக்கும் பொலிஸார், சந்தேகநபரை ஆபத்தான ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழும் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகக் குறிப்பிட்டனர்.

யாழ்ப்பாணம் நகரில் குடும்பப் பெண் ஒருவரின் கைப்பையைப் பறித்துச் சென்று அதிலிருந்த 24 தங்கப் பவுண் நகையை கொள்ளை அடித்தமைக்கு சந்தேகநபர் தேடப்பட்டு வந்தார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைக்குண்டு வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தால் அவரை மேல் நீதிமன்றினாலேயே பிணையில் விடுவிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கடந்த செப்டம்பர் 30 ஆம் திகதி ஹெரோயின் போதை பொருளை தமது உடமையில் வைத்திருந்தார் எனும் குற்றசாட்டில் ஓட்டுமடம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

பொலிஸ் நிலைய சிறைக்கூட இரும்புப் கடலையின் பூட்டினை சரியாக பொலிஸார் பூட்டததால், அதனை திறந்து சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் இருந்து தப்பி சென்று தலைமறைவானார்.

சம்பவத்தை அடுத்து ரிசேர்வ் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

தப்பி சென்ற நபரை கடந்த இரு வார காலத்திற்கு மேலாக பொலிஸார் தேடி வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அவர் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபரைக் கைது செய்த யாழ்ப்பாணம் சிறப்பு பொலிஸ் பிரிவினர், பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *