வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவில் இணைந்த தமிழ் அரசியல் கட்சிகள்! வெளியேறினார் கஜேந்திரகுமார்

பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் தயாரிக்கப்பட்ட இணக்கப்பாட்டு ஆவணத்தில் ஐந்து கட்சிகள் கையொப்பம் இட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாழ் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் இந்த கூட்டம் இரண்டு நாட்களாக நடைபெற்றது. எனினும் சில கருத்து வேறுபாடுகளால் ஒரு இணக்கப்பாட்டிற்று வரமுடியவில்லை.

இந்நிலையில் இன்றைய தினம் மீண்டும் கட்சிகள் கூடின. இதன்போது பொது இணக்கப்பாட்டு ஆவணத்தில் ஐந்து கட்சிகள் கையொப்பமிட்டுள்ளன.

இதன்போது தமிழ் தேசிய மக்கள் முன்னணி இன்றும் முரண்பட்டுக் கொண்டதுடன் ஆவணத்தில் கையொப்பம் இடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பொது இணக்கப்பாட்டு ஆவணத்தில் தமிழ் அரசு கட்சி, புளொட், ரெலோ, தமிழ் மக்கள் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகியன கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இக் கூட்டத்திற்கான ஏற்பாட்டாளர்கள் மற்றும் மற்றைய கட்சி தலைமைகளுடன் முரண்பட்டுக் கொண்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி இறுதியில் வெளிநடப்பு செய்ததாக கூறப்படுகிறது.

தமிழ் பொது வேட்பாளர் கைகூடாத காரணம் இறுதி நேரங்களில் பேசியது என்பது பொதுவான கருத்தாகும். கஜேந்திரகுமாரின் நியாயமானது என்றாலும் ஏதாவது முடிவுக்கு தமிழ் கட்சிகள் வருகின்ற வேளையில் பொது இணக்கப்பாட்டுக்கு அனைத்து கட்சியினரும் வருவது தமிழ் மக்களின் அரசியல் இருப்புக்கு காத்திரமானதாகவும் இருக்கும்.

ஆனால் இந்த நேரத்தில் தூர நோக்குடனான சிந்தனையில் செயற்படாமல் குழப்பங்களை ஏற்படுத்துவது ஆரோக்கியமானதாக அமையாது. குறிப்பாக வடக்கு கிழக்கு கட்சிகள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் சர்வ மதத் தலைவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் என்று அனைத்துத் தரப்பினரும் ஒரு புள்ளியில் ஒன்றித்து இணைந்து பேசுகையில் அவற்றை தமிழ் மக்களின் நலன்சார்ந்து சிந்தித்தாக வேண்டும்.

இந்த இடத்தில் கஜேந்திரகுமார் மிகச் சரியாக சிந்தித்து அடுத்தகட்ட நகர்வுகளுக்கான அடித்தளமாக இவற்றைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். முன்னதாக ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் பேசப்பட்டது.

எனினும் அதனை முன்கூட்டியே பேசியிருக்க வேண்டும். அதற்கான போதிய நேரகாலம் இல்லாத நிலையிலேயே அது கைநழுவிப் போகக் காரணமாக இருந்தது.

இந்நிலையில் மற்றைய கட்சிகள் பொது இணக்கப்பாடு ஒன்றிற்கு வந்திருக்கும் வேளையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினும் கைகோர்த்து தமிழர் அரசியல் குறித்த நகர்வினை இன்னொரு கட்டத்திற்கு நகர்த்தியிருக்கலாம் என்கிறார்கள் விமர்சகர்கள்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *