அவுஸ்திரேலியாவை அடுத்து அகதிகளாக செல்ல புதிய இடத்தை கண்டுபிடித்துள்ள இலங்கையர்கள்!

அவுஸ்திரேலியாவுக்கு வருகின்ற அகதிகளை திருப்பி அனுப்புகின்ற நடவடிக்கைகள் அரசு மட்டத்தில் தீவிரம் அடைந்துள்ளது.

இந்நிலையில், இலங்கை தமிழர்கள் உட்பட தஞ்சக்கோரிக்கையாளர்கள் வேறு கடற்பாதையின் வழியாக புதிய தேசமொன்றுக்கு பயணமாகுவது சமீப காலமாக தொடர்கிறது என்று அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபை அமைப்பு (UNHCR) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்து சமூத்திரத்தில் அமைந்துள்ள மடகஸ்காருக்கும் மொஸாம்பிக்கிற்கும் இடையில் அமைந்துள்ள பிரான்ஸிற்கு சொந்தமான La Réunion மற்றும் Mayotte ஆகிய தீவுகளில் படகு மூலம் போய் இறங்கும் இந்த அகதிகள் அங்கு அடைக்கலம் கோருவது சமீப காலமாக அதிகரித்துள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி முதல் 2019ம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான காலப்பகுதியில் இலங்கையிலிருந்து சுமார் 291 தஞ்சக்கோரிக்கையாளர்கள் இவ்வாறு போயிறங்கியிருப்பதாக UNHCR அமைப்பு இந்த மாதம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஆனால், அடைக்கலம் கோரும் இந்த அகதிகளின் விண்ணப்பங்கள் பிரஞ்சு தரப்பினரால் கடுமையான முறையில் கையாளப்பட்டு நிராகரிக்கப்பட்டு பெரும்பாலனவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் இவ்வாறு வந்திறங்கியவர்களின் அகதிக்கோரிக்கை தொடர்பில் மாத்திரம் பிரஞ்சு தரப்பினர் ஓரளவுக்கு நெகிழ்ச்சித்தன்மையை காண்பித்திருக்கிறார்கள் என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம் வரை அங்கு சென்ற இலங்கையை சேர்ந்த சுமார் 120 அகதிகளில் 34 பேர் தஞ்சக்கோரிக்கையை முன்வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளனர். 60 பேர் உடனடியாகவே இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

மூன்று குழந்தைகள் உட்பட மிகுதிப்பேர் இன்னமும் அங்குள்ளார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, கடந்த பெப்ரவரி மாதம் Réunion தீவில் போயிறங்கிய இலங்கையை சேர்ந்த எழுபது பேரில் ஆறு பேர் மாத்திரமே தஞ்சக்கோரிக்கையை விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டார்கள்.

பிரஞ்சு குடிவரவுக்கொள்கையின்படி, தஞ்சக்கோரிக்கையை விண்ணப்பிக்க முன்னரே அதனை தடுத்து குறிப்பிட்ட தஞ்சக்கோரிக்கையாளர்களை நாடுகடத்தமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையிலிருந்து சுமார் நாலாயிரம் கிலோமீற்றர் தூரம் படகுகள் மூலம் அகதிகளாக போகின்றவர்களின் இந்த புதிய கடற்பயணம் குறித்து UNHCR கவலையும் கரிசனையும் வெளியிட்டுள்ளது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *