விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு! வெளிநாட்டில் கைதானவர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புள்ளதாக தெரிவித்து மலேசியாவில் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் குறித்த பல்வேறு தகவல்களை அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினர்கள் வெளியிட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவை அறிவித்த மலேசியாவின் டி.ஏ.பி கட்சியின் இருவர் உட்பட 07 பேர் அந்நாட்டுப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வருடம் நவம்பர் மாதத்திலிருந்து முன்னெடுக்கப்பட்ட விரிவான விசாரணையின் பின்னர் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள மலேசிய காவல்துறை பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவின் தலைமை துணை ஆணையர் டத்தோ அயோப் கான் இவ்வாறு கூறியுள்ளார்.

“கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை துணைத்தூதர் தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்களும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கோலாலம்பூரில் உள்ள இலங்கை தூதரகத்தை தாக்க திட்டமிட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்தாண்டு நவம்பர் மாதம் முதல் சந்தேக நபர்களைக் கண்காணித்து வந்தோம். அதன் தொடர்ச்சியாகவே சம்பந்தப்பட்டவர்கள் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் தான் முதலில் கைது செய்யப்பட்டார். விடுதலைப் புலிகள் சிலரை கவுரவிக்கும் விதமாக மலாக்கா மாநிலத்தில் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற நிகழ்ச்சியில் குணசேகரன் கலந்து கொண்டுள்ளார்.

அந்நிகழ்வில் உரையாற்றியதுடன், அந்த அமைப்புடன் தொடர்புள்ள துண்டுப் பிரசுரங்களையும் அவர் விநியோகித்ததாக நம்புகிறோம்.

கோலாலம்பூரைச் சேர்ந்த 28 வயதான காப்பீட்டு முகவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர் கோலாலம்பூரில் இயங்கி வரும் இலங்கை தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆதரவாக இரகசியக் கூட்டங்களை நடத்தி அந்த அமைப்புக்காக பிரசாரம் செய்த டாக்சி ஒட்டுநரையும் தடுத்து வைத்துள்ளோம். 37 வயதான அந்த ஆடவருக்கும் இலங்கை துணைத் தூதர் கோலாலம்பூரில் தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புள்ளது.

கைது நடவடிக்கையின் போது நடத்தப்பட்ட சோதனையில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆதரவான பதாகைகள், துண்டுப் பிரசுரங்கள், அமைப்பின் கொடி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைதானவர்களுடன் இணைந்து செயல்பட்டவர்கள் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. எனவே மேலும் சிலர் கைதாக வாய்ப்புள்ளது.

பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளிக்கும் யாரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது” என அவர் மேலும் கூறியுள்ளார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *