ஞானசார தேரரை கைதுசெய்ய வேண்டும்! மைத்திரியிடம் மாவை வலியுறுத்து

ஞானசார தேரரைக் கைதுசெய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிடவேண்டும் என்று கோரிக்கை முன்வைத்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சோ.சேனாதிராசா, மதச்சார்பற்ற நாடாக இலங்கை இருக்கும் புதிய அரசமைப்பு உருவாக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“ஞானசார தேரரும், மல்வத்த பௌத்த பீடமும் தமிழினத்தையும் இந்துமதம் முதலான ஏனைய மதங்களையும் மதத் தலங்களையும் எச்சரிப்பதையும் ஆக்கிரமிப்பதையும் அடக்கி ஆள முயற்சிப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

பௌத்த மதத்துக்கு முன்னுரிமை என்று ஏனைய மதங்களை அடக்கி ஆள, ஒழித்துவிட எடுக்கப்படும் முயற்சிகள் அரசமைப்பு ரீதியில் மதங்களின் சமத்துவத்தையும் மத நம்பிக்கையையும் பாதுகாக்க வேண்டுமென்பது அவசியமாகிவிட்டது.

இந்தியாவில் பல மதங்கள், பல இனங்;கள் ஏற்கப்படுவதை அரசமைப்பு ஊடாகப் பேணிப் பாதுகாப்பதை உறுதிப்படுத்தி நிற்கின்றது. இந்திய அரசமைப்பு மதசார்பற்ற நாடு என்றே பிரகடனப்படுத்தியுள்ளது.

இலங்கையிலும் எந்த ஒரு மதத்துக்கும் முன்னுரிமை வழங்காமல் பல இனங்களையும், பல மத நம்பிக்கைகளையும் மத பீடங்களையும் கொண்டுள்ள அடிப்படை விதியை ஏற்று மதசார்பற்ற அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

மேலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஞானசார தேரரை மன்னிப்பளித்து விடுதலை செய்தமை ஊடாக அவர் மீண்டுமொருமுறை அரசியல் தவறிழைத்தமை நிரூபணமாகின்றது.

நீதிமன்றத்தை அவமதித்தமை, சட்டத்தரணிகளை தாக்கியமை உள்ளிட விடயங்களுக்காக ஞானசார தேரர் உட்பட்ட சம்பந்தப்பட்டவர்களைக் கைதுசெய்ய ஜனாதிபதி மைத்திரிபால உத்தரவிடவேண்டும்.

அல்லது மத ரீதியாக, இன ரீதியாக, பிரதேச ரீதியாக இலங்கை பிளவுபட்டுவிடும். இந்த விளைவுகளுக்கு ஜனாதிபதியும், அரசுமே பொறுப்பு” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *