இது சிங்களவர்களின் நாடல்ல என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும்- சி.வி தெரிவிப்பு!

கல்வியும், பௌத்தமதப் பின்னணியும் “வாழ் மற்றவரையும் வாழவிடு” என்ற மனோநிலையை சஜித்திற்கு கொடுத்திருக்கும் என தான் நம்புவதாக சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார் .

இன்று அவர் அனுப்பி வைத்துள்ள வாராந்த கேள்வி பதிலில் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அதில் சஜித்தைத் தேர்ந்தெடுத்தமை எனக்குத் தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியை அளிப்பதாகவும் கொழும்பு றோயல் கல்லூரியில் தாராள மனப்பாங்குடைய ஆரம்பகாலக் கல்வியைப் பெற்றவர் என்றும் ஆனால் அவர் காலத்தில் வகுப்புகள் மொழிரீதியாகப் பிரிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அடிப்படையில் கொழும்பு றோயல் கல்லூரிக் கல்வியும், அவரின் பௌத்தமதப் பின்னணியும் மேலும் இலண்டன் பொருளாதாரக் கல்லூரியிலும் வேறு கல்லூரிகளிலும் அவர் பெற்ற கல்வியுமானது அவருக்கு“வாழ் மற்றவரையும் வாழவிடு” என்ற மனோநிலையைக் கொடுத்திருக்கும் என தான் நம்புகின்றேன் எனவும் சி.வி தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவருக்கு ஒரு கெட்டியான பௌத்த பின்னணி இருப்பது வரவேற்கத்தக்கது எனினும், ஆனால் ஒரு சில விடயங்கள் அவர் தமிழர் மீது தன்னுறுதியில்லாத மனோநிலையைக் கொள்ளக் கூடியவாறு அமைந்திருக்கலாம் எனகூறிய விக்கினேஸ்வரன்,

அவரின் தந்தையார் தமிழ்ப் போராளிகளின் வன்முறைக்கு இலக்கானார் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை ஒரு காரணம்.

அடுத்தது நிருவன மயப்படுத்தப்பட்ட பௌத்தத்திற்கும் புத்தரின் போதனைகளுக்கும் இடையில் இருக்கும் வித்தியாசத்தை அவர் உணர்ந்து கொண்டுள்ளாரோ தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எமது அரசியல் யாப்பானது புத்தரின் போதனைகளை ஆங்காங்கே உட்புகுத்தியிருக்கலாம். ஆனால் நிறுவனப்படுத்தப்பட்ட பௌத்தத்திற்கு முன்னுரிமை கொடுத்தமை தவறென்று நான் பலமுறை கூறியுள்ளேன்.

நிறுவன மயப்படுத்தப்பட்ட பௌத்தம் வேறு, புத்தபெருமானின் போதனைகள் வேறு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் முல்லைத்தீவில் பொதுபலசேனா இயற்றிய கூத்துக்கள் நிறுவனமயப்படுத்தப்பட்ட பௌத்தத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை வெளிக்கொண்டு வருகின்றன. அவற்றின் குற்றவியல் தன்மையையும் வெளிக்காட்டி நிற்கின்றன.

மேலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க அவரின் “இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு” என்ற அதிதீவிர சிந்தனை தடையாக இருக்கலாம்.

ஆனால் , இந்தநாடு சிங்கள பௌத்தர்களுக்குரிய நாடு அல்ல. புத்தர் காலத்திற்கு முன்பிருந்தே இந்த நாடு சைவத் தமிழ் நாடாக இருந்ததையும் சி.வி நினைவுபடுத்தியுள்ளார்.

பௌத்தம் அறிமுகப்படுத்தப்பட்டதே தமிழ் இந்துக்கள் மத்தியில் தான் என்றும் மேலும் சிங்களமொழியானது நடைமுறைக்கு வந்தது கி.பி.6ம் அல்லது 7ம் நூற்றாண்டிலேயே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று 2000 ஆண்டுகளுக்கு மேலான தொல்பொருள் சார்ந்த பௌத்த எச்சங்கள் என்று கூறப்படுபவை தமிழ் பௌத்தர்கள் கால எச்சங்கள்.

இன்று நாட்டின் 75 சதவிகிதமானவர்கள் சிங்கள் பௌத்தர்கள் என்பதுஉண்மையே.

ஆனால் வடகிழக்கின் 85 சதவிகிதத்திலும் அதிகமானவர்கள் தமிழ்ப் பேசும் மக்களே. எங்களைப் பொறுத்தவரையில் எந்த மதத்திற்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதே எமது நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கில் இந்து சமயமானது ஆதி காலந் தொட்டு கோலோச்சி வந்துள்ளதோடு, அது மற்றைய மதங்கள் யாவற்றையும் மதிக்கும் ஒரு சமயம் என்றும் அவர் சுட்டிகாட்டியுள்ளார்.

“உண்மை ஒன்று; அதை ஞானிகள் பல நாமங்களால் குறிப்பிடுகின்றார்கள்” என்பதே இந்துமக்களின் கருத்து வெளிப்பாடுஎன்றும், அதனால்த்தான் வட கிழக்குத் தமிழ்ப் பேசும் மக்கள் தமக்கு பிரிக்கப்படாத நாட்டினுள் சுயாட்சியைக் கோருகின்றார்கள் எனவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அவரின் தந்தையை நான் அறிந்திருந்தேன். தன் தந்தையாரின் செயலாற்றல் திறமையை மகன் பெற்றிருந்தால் இதுவரையில் “தேசிய அபிமானிகள்” என்ற வகையில் ஆட்சி செய்தவர்களில் இருந்தும் வித்தியாசமான ஒருவராக சஜித் சிறந்து விளங்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தன்னால் பின்னப்பட்ட வலையில் இருந்து சஜித் விடுபட்டாரானால் எல்லா மக்களும் பாராட்டும் அதி சிறந்த ஜனாதிபதியாக வரக்கூடிய தகைமைகள் கொண்டவர் என்பது த னது கருத்து எனவும் கூறிய சி.வி, ஜனாதிபதியின் அதிகாரங்கள் அண்மையில் கத்திரிக்கப்பட்டிருந்தாலும் அவர் தனது சிறப்பினை வெளிக்காட்டக் கூடியவர் என்பதே எனது கருத்து என்றும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *