வடக்கிலிருந்து ஒரு படைமுகாமைக்கூட அகற்றப்போவதில்லை! இராணுவ தளபதி திட்டவட்டம்

வடக்கிலிருந்து ஒரு படைமுகாமைக்கூட அகற்றப்போவதில்லை என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன், தன்மீது முன்வைக்கப்பட்டு வருகின்ற அனைத்துக் குற்றச்சாட்டுக்களும் வெறும் குற்றச்சாட்டுக்கள் மாத்திரமே என்றும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா,

“எனக்கு எதிராகவும் குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றன. அந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்தாலும் நாங்கள் முன்நோக்கி நகர்வோம். இவ்வாறான பல்வேறு குற்றச்சாட்டுக்களை நாங்கள் சந்தித்துதான் வருகின்றோம்.

மன்னார் மனிதப் படுகுழி தொடர்பாகவும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இருப்பினும் பல்வேறு சந்தேகங்கள் வந்தாலும் பின்னர் அவை ஒன்றுமே இல்லாமலாகின. அதேபோலவே இந்தக் குற்றச்சாட்டுக்களும் வருகின்றன.

படையினரது எண்ணிக்கையை இந்த நாட்டிற்குள் அமைப்பது குறித்த தெளிவானது இராணுவத்திற்கே இருக்கிறது. முப்படையினர் இந்த வருடத்தில் இத்தனை எண்ணிக்கையை வைத்திருந்தது என்பது அடுத்த கட்ட எண்ணிக்கையை தக்கவைத்துக் கொள்வதற்கு அவசியமாகாது.

முகாம்களை தக்கவைத்துக் கொள்வதற்கு புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் மற்றும் இராணுவத்தின் தகவல்களுக்கு அமையவே திட்டமிடப்படுகின்றன.

வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அப்படியே தொடர்ந்தும் நாங்கள் வைத்திருப்போம். அங்குள்ள படை முகாம்களை அகற்றுவதற்கு எந்தவொது நடவடிக்கையும் இதுவரை நாங்கள் எடுக்கவில்லை.

எதிர்காலத்தில் நாட்டில் காணப்படும் சூழ்நிலைக்கு அமைய அவ்வாறு செய்தால் ஒழிய இப்போதைக்கு முகாம்களை அகற்றும் எந்தத் தீர்மானமும் எங்களிடம் இல்லை.” என அவர் மேலும் கூறியுள்ளார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *