அந்நிய செலாவணியில் 40 வீதமானது தமிழா்களால் வருபவை! – வடக்கு ஆளுனர்

இலங்கையின் மொத்த அந்நிய செலாவணியில் 40 வீதமானது தமிழா்களால் கொடுக்கப்படுகிறது. என வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன் கூறியுள்ளார்.

வவுனியாவில் நேற்று நடைபெற்ற கூட்டுறவு சங்கமம் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே மேற்படி தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,கூட்டுறவு என்ற இயக்கம் மனிதாபிமானத்தின் அடிப்படையில் நாகரிகத்தைகொண்ட ஒரு இயக்கமாக இருக்கிறது.

அது மனிதாபிமான ரீதியான நுண்கடன்களை வழங்கி மக்களிற்கு உதவி செய்திருந்தது. ஆனால் இப்போதும் நுண்கடன் நிறுவனங்கள் இருக்கிறது.

அவற்றிடம் மனிதாபிமானத்தை காணவில்லை. உலகின் பல்வேறு நாடுகளில் கூட்டுறவின் மூலமான செயற்பாடுகள் தற்போதும் நடைபெற்ற வண்ணமே இருக்கிறது.

எனது அனுபவத்தின் பிரகாரம் கூட்டுறவிற்கு பின்னால் இருக்கும் மாபெரும் சக்தி பெண்களின் சக்தியாகவே இருக்கும்.

எனவே இந்த கூட்டுறவு சங்கங்கள் அனைத்தும் இணைந்து வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கி என்ற தாய்வங்கி ஒன்றை உருவாக்கியுள்ளோம்.

இதன்மூலம் நீங்கள் செய்து கொண்டிருக்கும் பணியினை இன்னும் வலுவாக செய்து கொள்வதற்கான தேசிய, சர்வதேச ரீதியாலான வழிமுறைகள் உங்களிற்கு கிடைக்கும்.

இலங்கையின் பிரதான வருமானமாக தற்போது அமைந்திருப்பது வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் அங்கு உழைத்து அனுப்பும் அந்நிய செலாவணி பணமே. அது 7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றது.

அந்த தொகையில் 40 சதவிகிதமானது தமிழர்கள் அனுப்பி வைக்கும் பணமாக இருக்கிறது. இந்ததொகையில் ஒரு சதவீதத்தையாவது, எமது வங்கிமூலம் பராமரிக்க முடியுமாக இருந்தால் அது தேசிய அளவிலான வங்கியாக மாறக்கூடிய வாய்ப்பிருக்கிறது. இது தொடர்பாக நாம் மத்தியவங்கி ஆளுனருடன் கதைத்து வருகிறோம்.

எனவே எதிர்காலத்தில் வணிக வங்கிகளை விட கூட்டுறவு வங்கிகள் பெருவளர்சியை அடையும் அதனுடாக மக்களிற்கு கிடைக்கும் சேவைகள் அதிகரிக்கும்.

முன்னதாக நிகழ்வு நடைபெற்ற மேடையில் தொங்க விடப்பட்டிருந்த பதாகையில் தனி தமிழ் மொழியில் அச்சிடப்பட்டிருந்தது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஆளுனர் மூவினமக்களும் ஒன்றாக வாழும் நல்லுள்ளங்கள்‌ கொண்ட மாவட்டம் வவுனியா.

எனவே இனிவரும் காலங்களில் சாராம்சமாகவேனும் சிங்கள மொழியிலும் பதாகைகளை அமைக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

அப்பொழுது தான் நாங்கள் கேட்டுகொண்டிருக்கும் உரிமையை நாம் அடுத்தவருக்கு கொடுக்கும் போது தான் எங்கள் உரிமை ஸ்தாபிக்கபடும் என மேலும் தெரிவித்துள்ளார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *