கடும் மோதலின் பின் நாடாளுமன்றத்திற்குள் ஒன்றான டக்ளஸ், சிறிதரன்
ஈ.பி.டி.பியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிற்குமிடையில் கடந்த சில நாட்களாக நாடாளுமன்றத்திற்குள் வார்த்தைப் போர் இடம்பெற்று வந்தது.
கடந்த மாத இறுதி அமர்வில் நாடாளுமன்றில் சிறிதரன் உரையாற்றியபோது, செம்மணி புதைகுழி மற்றும் மண்டைதீவு படுகொலை என்பவற்றிற்கும் டக்ளஸ் தேவானந்தா சாட்சியமளிக்க வேண்டுமென்றார்.
நேற்று முன்தினம், நாடாளுமன்றத்தில் இதற்கு பதலளித்த டக்ளஸ் தேவானந்தா, செஞ்சிலுவை சங்க வாகனத்தில் நகைகளுடன் தப்பி வந்த சிறிதரன் , செஞ்சோலையை காட்டிக்கொடுத்தார் என காரசாரமாக குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்த நிலையில், நேற்று டக்ளஸூம், சிறிதரனும் நேருக்கு நேர் சந்தித்தபோது சுவாரஸ்யமான உரையாடல் இடம்பெற்றது.
நாடாளுமன்றத்திற்குள் இருவரும் எதேச்சையாக நேருக்கு நேர் சந்தித்து கொண்டபோது, சிறிதரனை பார்த்து, நாடாளுமன்றத்தில் உரையாற்றவில்லையா? தனது பேச்சிற்கு பதிலளிக்கவில்லையா? என டக்ளஸ் நகைச்சுவையாக கேட்டபோது, இன்னொரு சந்தர்ப்பத்தில் தான் பதிலளிப்பதாக சிறிதரனும் கூறியுள்ளார்.
அத்துடன் சாம, பேத, தான, தண்ட வழிகளில் எதையும், தேவைக்கேற்ற பயன்படுத்துவோம் என இதன்போது குறிப்பிட்ட டக்ளஸ் , தன் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கள் குறித்து முறைப்பாடளிக்கவில்லையா என கேட்க, மண்டைதீவு கிணற்று எலும்புக்கூடுகள் குறித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கான அலுவலகத்தில் கையளிக்கப்பட்ட ஆவணத்தில் அவரது பெயரையும் குறிப்பிட்டுள்ளதாக சிறிதரன் கூறியுள்ளார்.
இந்த நிலையில் சில நிமிட உரையாடலின் பின்னர் , சிறிதரனின் முதுகில் தட்டிவிட்டு டக்ளஸ் கிளம்ப, இப்பொழுது முதுகில் தட்டுகிறீர்கள். முன்னர் என்றால் காதிற்குள் தட்டியிருப்பீர்கள் என சிறிதரன் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.