பாலாலி விமாநிலையம் தொடர்பில் டக்ளஸ் எச்சரிக்கை

யாழ்ப்பாணம் பாலாலி வீதிக்குக் கிழக்குப் பக்கமாக இதுவரையில் இருந்துள்ள பலாலி விமான நிலைய நுழைவாயிலைத் தற்போது மயிலிட்டிப் பக்கமாக மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வளவு காலமாக இழுபட்டுக் கொண்டிருந்த பலாலி விமான நிலைய அபிவிருத்தியானது அண்மையில் திடீரெனத் தொடங்கப்பட்ட நிலையில் , அங்கு விரைவில் விமான சேவைகள் ஆரம்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையிலான உறவில் மேலும் மேம்பாடுகள் ஏற்படும் என்ற நிலையில் இதனை நாங்கள் மிகவும் வரவேற்கிறோம் என டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற வெளிநாடுகள் / வெளிநாட்டு முகவர் நிறுவனங்கள் என்பவற்றுடன் அரசாங்கம் / அரசாங்க முகவர் நிறுவனங்கள் என்பன செய்து கொள்கின்ற ஒப்பந்தங்களுக்கு பாராளுமன்றத்தின் அனுமதியினைப் பெற்றுக் கொள்ளல்’ பற்றிய சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே பாலாலி வீதிக்குக் கிழக்குப் பக்கமாக இதுவரையில் இருந்துள்ள பலாலி விமான நிலைய நுழைவாயிலைத் தற்போது மயிலிட்டிப் பக்கமாக – அதாவது மேற்குப் பக்கமாக மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்பாடானது, எமது மக்களது சொந்தக் காணிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரையும் அபகரிப்பதற்கான ஒரு திட்டம் என அவர் கூரியுள்ளார்.

அத்துடன் இது ஒரு விடயமாக இருக்கின்ற நிலையில், மயிலிட்டிப் பக்கமாக நுழைவாயிலைத் திருப்புவதற்கும், ஏற்கெனவே மயிலிட்டிக் காணிகள் உள்ளடங்கலாக கடற்கரைப் பகுதியினை அமெரிக்கா ஆய்வு செய்திருப்பதற்கும் இடையில் சந்தேகம் எழுகின்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த ஒப்பந்தம் தொடர்பில் பார்க்கின்றபோது, இலங்கையில் அமெரிக்க பாதுகாப்புத் தரப்பினருக்கும், சிவில் பிரஜைகளுக்கும் 1961ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ஆம் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட வியானா உடன்படிக்கையின் பிரகாரம், தூதுவராலயங்களில் நிர்வாக மற்றும் தொழில்நுட்பச் சபையினருக்கு உரித்தான வரப்பிரசாதங்கள், சலுகைகள் மற்றும் அனுமதிகளை வழங்குமாறு கோரப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதுவராலயம் மேற்படி திட்டத்தின் ஊடாக இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளதாகத் தெரியவருகின்ற வரப்பிரசாதங்கள் வேறு வகை என்றும் டக்ள்ஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.

அதோடு அமெரிக்க தூதுவராலயம் கோரியுள்ள வரப்பிரசாதங்களை நன்கு ஆராய்கின்றபோது, அவர்கள் இலங்கையில் அமெரிக்கப் படைத்தளமொன்றை அமைப்பதையே கோருகின்றனர் என்பது தெள்ளத்தெளிவாகின்றதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தகைய வரப்பிரசாதங்களை அமெரிக்காவிற்கு வழங்குவதன் ஊடாக இலங்கையின் இறைமை, தேசிய பாதுகாப்பு அனைத்தும் பாரதூரமான நிலைக்குத் தள்ளப்படுவதோடு , இலங்கையின் அண்டைய நாடுகளுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகள் தொடர்பிலும், அதன் ஊடாக இந்த நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகள் தொடர்பிலும் நாம் சிந்திக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா இலங்கையுடன் மட்டுமல்ல உலகிலேயே நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுடன் இந்த சோபா ஒப்பந்தத்தைச் செய்து கொண்டுள்ளது என கூறலாம் என்றும், எனினும் இந்த ஒப்பந்தம் காரணமாக அந்தந்த நாடுகளிலே இன்றைய நிலையில் பல்வேறு சமூகப் பிரச்சினைகள் உருவாக்கி இருக்கின்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதோடு அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைத் தேடிக் கொள்வதற்கு அந்த நாடுகளால் இயலாமல் இருப்பதற்குக் காரணம், இந்த சோபா ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் என்றே கூறப்படுகின்றதாகவும் டக்ளஸ் கூரியுள்ளார்.

இதனை உறுதிப்படுத்துகின்ற கட்டுரையொன்று Australian Woman renews plea for Japan’s government to amend U.S. Forces agreement after rape ordeal’ எனும் தலைப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 05ஆம் திகதி ஜப்பான் ரைம்ஸ் – Japan Times பத்திரிகையில் வெளிவந்திருக்கின்றதையும் அவர் நினைவுபடுத்தியுள்ளார்.

இதேவேளை எமது பகுதிகளிலே கிருசாந்திமார், கோணேஸ்வரிகளின் கதைகள் இன்னமும் கண்ணீருடன் நினைவு கூறப்பட்டு வருகின்ற நிலையில், இந்த ஒப்பந்தத்திற்கும் வழிவிட்டால், காலம் பூராகவும் இத்தகைய கண்ணீர்க் கதைகளையே நாங்கள் சுவாசித்துக் கொண்டிருக்க வேண்டி வரும் என்பதை இங்கு ஓர் எச்சரிக்கையாக எடுத்துக் கூறுகின்றேன் என்றும் டக்ளஸ் தேவேனந்தா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *