நல்லூர் ஆலய வளாகத்துக்குள் பிரவேசிக்க புதியதாக திடீர் தடை?
நல்லூர் முருகன் ஆலயத் திருவிழா இடம்பெற்று வரும் நிலையில் புதிய தடை ஒன்று விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கமைய ஆலய வளாகத்துக்குள் தூக்குக் காவடிகள் எவையும் பிரவேசிக்க முடியாது என ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.
அத்துடன் தூக்கு காவடியுடன் வரும் பக்தர்கள் நுழைவதற்கான எல்லைகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தூக்கு காவடியுடன் வரும் பக்தர்கள் பருத்தித்துறை வீதியூடாக பிரவேசித்து செட்டித்தெரு வரையிலேயே வரமுடியும். குறித்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியுடன் தூக்குக் காவடியுடன் வரும் உழவு இயந்திரங்கள் திருப்பி அனுப்பப்படும் என ஆலய நிர்வாகத்தினரால் தெரிவிக்கப்பட்டுள்ளதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
நல்லூர் உற்சவ காலத்தின் தேர்த்திருவிழா, தீர்த்த திருவிழாவின்போது அடியவர்கள் தமது நேர்த்திகளை நிறைவேற்றுவது வழக்கமாக காணப்படுவதுடன், தூக்குக் காவடிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வரையிலும் நல்லூர் கோயிலின் முன்முகப்பு வரையிலும் அனுமதிக்கப்பட்டு வந்தன.
எனினும் கடந்த 3 ஆண்டுகளாக தூக்குக் காவடிகள் தெற்கு வாசல் கோபுரம் வரையே அனுமதிக்கப்பட்டிருந்தது.
அத்துடன், தெற்கு வாசல் கோபுரத்தடியில் வைத்து தூக்குகாவடிகள் இறக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், இந்த ஆண்டு ஆலயச் சுற்றாடலுக்குள் தூக்குக்காவடிகள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆலய நிர்வாகத்தினரே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அவர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக செட்டித்தெரு வாயில் வரையிலேயே தூக்குக் காவடிகள் அனுமதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ் அறிவிப்பு பக்தர்களிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வழமையாக தாம் வழங்கும் நேர்த்திக் கடன்களிற்கு இப்படி தடைவிதிப்பத மிகுந்த வேதனை அளிப்பதாக கூறப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.