அரசியல்கைதிகள் விடயத்தில் எம்முடன் கூட்டமைப்பு ஒத்துழைக்கவில்லை!
நாமல் ராஜபக்சவிற்கும் யாழ் வணிகர் கழக்கத்திற்குமிடையில் நேற்று மாலை சந்திப்பொன்று இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்திற்கான பயணத்தை மேற்கொண்டுள்ள நாமல் ராஜபக்ச, நேற்று பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பேசினார். இதன் ஒரு கட்டமாக, யாழ் வணிபர் கழகத்தையும் சந்தித்தார். நாமல் ராஜபக்சவுடன், அங்கயன் இராமநாதனும் இந்த சந்திப்பிற்கு சென்றிருந்தார்.
சந்திப்பின்போது தமிழ் மக்களின் அன்றாட, அடிப்படை பிரச்சனைகள் பலவற்றை யாழ் வணிகர் கழக பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.
“2005ம் ஆண்டு தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணித்தமையினாலேயே மஹிந்த ஆட்சிக்கு வந்தார். ஏதோ ஒரு விதத்தில் மஹிந்த குடும்பம் அதிகாரத்திற்கு வர தமிழர்கள் உதவினார்கள். அன்று அந்த சம்பவம் நடந்திராவிட்டால், மஹிந்த குடும்பம் இன்று இவ்வளவு செல்வாக்கை பெற்றிருக்குமா?
ஆனால், மஹிந்த அரசு தமிழர்களிற்கு எதிராகவே செயற்பட்டது. இனப்பிரச்சனையை தீர்க்க கிடைத்த வாய்ப்புக்களை தவறவிட்டது. மிதவாத தலைவர்களுடன் கைகோர்த்து, பிரச்சனைக்கு தீர்வு கண்டிருக்க வாய்ப்பிருந்தும் அதை செய்யவில்லை. 70 வருடமாக தமிழ் மக்களை, சிங்கள தலைவர்கள் ஏமாற்றி வருகிறார்கள். இனியும் யாரையும் நம்பத் தயாராக இல்லை“ என்று தெரிவித்தனர்.
தாம் ஆட்சிக்கு வர தமிழர்களும் காரணமென்பதை குறிப்பிட்ட நாமல், யுத்தத்தின் பின்னர் தாம் மேற்கொண்ட பொருளாதார அபிவிருத்தி பணிகளை பட்டியலிட்டார். ஏ9 வீதி, சங்குப்பிட்டி வீதி அபிவிருத்திகள், வேலைவாய்ப்புக்களை பட்டியலிட்டார்.
எனினும், வணிகர் சங்க பிரதிநிதிகள், “தமிழ் மக்கள் 70 வருடமாக போராடியது அபிவிருத்திகளை பெறவல்ல. உரிமைக்காகவே போராடினார்கள். தொடர்ந்தும் அதே நிலைப்பாட்டிலேயே இருக்கிறார்கள்“ என்றும் தெரிவித்தனர்.
வேலைவாய்ப்பு, கடன் வழங்கல், மீள் கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை வர்த்தகர் சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர். “இலங்கையில் தமிழர்களிற்கு ஒரு சட்டம், சிங்களவர்களிற்கு ஒரு சட்டமென்ற நிலைமையுள்ளது.
கன்னியா, நீராவியடி உள்ளிட்ட இடங்களில் தமிழர்களி்ன் பூர்வீக நிலங்களை அபகரிக்கிறார்கள். சிங்களவர்களிற்கு ஒரு சட்டம். தமிழர்களிற்கு ஒரு சட்டம் என்ற நிலையேற்பட்டு விட்டது.“ என்பதையும் சுட்டிக்காட்டினர். நாமல் இதை தலையசைத்து ஏற்றுக்கொண்டார்.
அரசியல் கைதிகள் பற்றி பேசியபோது, “ஒக்ரோபர் ஆட்சி மாற்றத்தின் பின் புதிய ஆட்கியில் அரசியல் கைதிகளை விடுவிக்க நான் தனிப்பட்ட முறையிலும் முயற்சித்தேன். நானும் சிறைச்சாலையில் இருந்தபோது அனேகமான அரசியல்கைதிகளுடன் எனக்கு தொடர்புள்ளது. கிளிநொச்சியில் ஒரு அரசியல்கைதிக்கு வீடும் அமைத்து கொடுக்கிறேன்.
சிறையிலுள்ளவர்களில் நான்கைந்து பேர்தான் கடுமையான குற்றச்சாட்டுடையவர்கள். அவர்களை தவிர்த்து மிகுதி அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. ஒக்ரோபர் ஆட்சிமாற்றத்தின் பின், அரசியல்கைதிகள் விடயத்தில் எம்முடன் கூட்டமைப்பு ஒத்துழைக்கவில்லை“ என்றார்.
அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.