யாழில் ஏற்படப் போகும் பேராபத்து!

5G அலைவரிசை கோபுரம் அமைக்கும் செயற்பாடுகளை நிறுத்தக் கோரி, யாழ். மாநகர முதல்வரின் அலுவலகத்தை முற்றுக்கையிட்டு நேற்று அப்பகுதி மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது, யாழ்.மாநகர சபையின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள், வெளிநடப்புச் செய்ததினால், சபை அமர்வுகள் முடக்கப்பட்டன.

யாழ்.மாநகர சபையின் அமர்வு நேற்று காலை 9.00 மணியளவில் ஆரம்பமாகவிருந்த நிலையில், பொது மக்கள் அணிதிரண்டு, மாநகர முதல்வரின் அலுவலகம் மற்றும் சபை வாயிலை மூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தப் போராட்டத்தில், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு, மற்றும், பல்வேறு மக்கள் சார்ந்த அமைப்புக்கள், பொது மக்கள் எனப் பலரும், கண்டனத்தையும் எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளனர்.

யாழ்.மாநகர முதல்வரின் அனுமதியுடன், யாழ்.மாநகர ஆணையாளரின் ஒப்புதலின்றி, தன்னிச்சையாக 5G அலைவரிசை கோபுரம் அமைப்பது தொடர்பாக மாநகர முதல்வர் தன்னிச்சையாக செயற்படுகின்றதாக குற்றஞ்சாட்டியும், பொது மக்களுக்கு 5Gஅலைவரிசை தொடர்பான விழிப்புணர்வுகள் எதுவுமில்லை என்றும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட எமக்கு 5G அலைவரிசை கோபுரம் தேவையில்லை என்றும், முதல்வருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தின் போது, முதல்வர் தனது அறையில் இருந்ததுடன், போராட்டக்காரர்கள் வெளியில் வருமாறு அழைப்பு விடுத்த போதும், முதல்வர் போராட்டக்காரர்களை சந்திக்க வெளியே வரவில்லை.

குறிப்பாக, யாழ்.நகரப் பகுதிகளில் உள்ள பாடசாலைகள், மற்றும் கோவில்கள், போன்ற பிரதான இடங்களில் 5G அலைவரிசை கோபுரம் அமைப்பதை உடனடியாக நிறுத்துமாறும் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் இந்த 5G கோபுரத்தினால் மனிதர்களுக்கு புற்று நோய் ஏற்பட கூடிய சாத்திய கூறு அதிகளவில் இருப்பதாகவும், கருவில் வளரும் சிசுவுக்கு இது நச்சாக மாற கூடிய அபாயம் இருப்பதாக கூறியுமே, மக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதன்போது அறிவியல் எனக் கூறி ஆபத்தை விதைக்காதே, 5G இரகசியமாக செயற்படுத்துவதன் மர்மம் என்ன?, வேண்டாம் வேண்டாம் 5G டவர் வேண்டாம் போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை மக்கள் ஏந்தியிருந்தனர்.

சுமார் 2 மணித்தியாலங்கள் இந்த போராட்டம் தொடர்ந்ததுடன், இந்தப் போராட்டத்தில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர், அங்கஜன் மற்றும் பல அரசியல்வாதிகள் போராட்டத்திற்கு சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

போராட்டத்தில், அரசியல்வாதிகளை கலந்துகொள்ள வேண்டாமென்று பொது மக்கள் தெரிவித்ததுடன், 5G அலைவரிசை கோபுரம் அமைப்பதற்கு வன்மையாக கண்டித்துள்ளதுடன், அலைவரிசை கோபுரம் அமைக்கும் பணியை நிறுத்தாவிடின், தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் பொது மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *