தமிழினப் படுகொலையின் சாட்சியமாக இருந்தவர் அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதன்

முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலையின் சாட்சியமாக இருந்து ஈழத்தமிழர்களின் நீதியின் குரலாக ஒலித்த அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதனின் மறைவுக்கு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது மரியாதை வணக்கத்தினை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சிறிலங்கா அரசினால் தமிழர் தேசம் ஆக்கிரமிக்கப்பட்டும், அழிக்கப்பட்ட போதெல்லாம் மக்களோடு மக்களாக நின்று, மானிடத்தின் மீதான தன் அன்பையும் அரவணைப்பையும் இறைபணியாக வெளிப்படுத்தியவர்

அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதன் அவர்கள். அதனால்தான் மக்களாலும் தலைமையினாலும், போராளிகளாலும் பெருதும் நேசிக்கப்பட்டவர்.

இறுதி யுத்தத்தின் போது போர்தவிப்பு வலயங்கள் என்று அறிவித்தவாறு, அவ்வலயங்கள் மீதே இனப்படுகொலையைச் செய்திருந்த சிங்கள அரசின், வலைஞர் மடம் தேவாலயம் மீதான தாக்குதலின் போது காயமடைந்த நிலையிலும், அத்தாக்குதலின் சாட்சியமாக இருந்தவர் மட்டுமல்லாது நீதிக்கான குரலாக ஒலித்தவர்.

2004ம் ஆண்டு சுனாமிப் பேரழிவின் போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆற்றிய பணிகள் என்பது மானிடத்தின் மீதான இறையன்பின் உச்ச வெளிப்பாடாக அமைந்தது.

தமிழர்களின் போராட்ட தடத்தில் மனித நேயத்தாலும், நீதியின் குரலாகவும் இருந்த அருட்தந்தை அவர்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மரியாதை வணக்கம் செலுத்தி நிற்கின்றது என இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டள்ளது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *