தலைமன்னார்- ராமேசுவரம் இடையே கப்பல் போக்குவரத்து தொடங்க தமிழக முதல்வர் எடப்பாடிக்கு விருப்பமில்லை!

ராமேசுவரத்துக்கும் தலைமன்னாருக்கும் இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்தைத் தொடங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு விருப்பமில்லை என இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சர் ஜான் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இந்தியா-இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1914-ல் தொடங்கப்பட்டது.

இந்நிலையில் 1964 டிச. 22-ல் தனுஷ்கோடியை புயல் தாக்கியதால் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டு பின்னர் 1965-ல் மீண்டும் கப்பல் போக்குவரத்துத் தொடங்கப்பட்டது.

தமிழகத்திலிருந்து வியாபாரிகள் பல்வேறு வகையான பண்டங்களையும், சரக்குகளையும் தலைமன்னார் வரையில் கப்பலிலும் அதைத் தொடர்ந்து ரயிலில் கொழும்பு வரையிலும் கொண்டு சென்று விற்பனை செய்தனர்.

அதோடு , கொழும்பிலிருந்து எலட்ரிக்கல்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை தமிழகத்துக்கு வாங்கி வந்தனர். இதனால், தென் மாவட்டங்கள் வளர்ச்சி அடைந்தன.

இலங்கையில் உள்நாட்டுப் பிரச்சினை யுத்தமாக மாறியதால் பாதுகாப்புக் காரணங்களால் மீண்டும் 1983-ம் ஆண்டு கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் மீண்டும் கப்பல் போக்குவரத்தைத் தொடங்க இரு நாட்டு அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இந்நிலையில், இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சர் ஜான் அமரதுங்க நேற்று கொழும்பில் செய்தியாளர்களிடம் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தின் பணிகள் நிறைவடைந்ததும் இந்தியாவிலுள்ள நகரங்களுக்கு இடையேயான விமானச் சேவைகள் தொடங்கப்படும் என கூறியுளார்.

அதோடு , ராமேசுவரத்துக்கும் தலைமன்னாருக்கும் இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டால் பயணச் செலவு மேலும் குறைவதுடன் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அந்தவகையில் தலைமன்னார்- ராமேசுவரம் இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்தைத் தொடங்க இலங்கை தயாராகவே உள்ளது.

இது குறித்து இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்ற நிலையில் , இந்த கப்பல் போக்குவரத்தைத் தொடங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு விருப்பமில்லை என தெரிவித்துள்ளார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *