பலாலியிலிருந்து ஆரம்பமாகும் விமான சேவை : தமிழக விமான நிலையங்கள் புறக்கணிப்பு!!

இலங்கையின் மூன்றாவது அனைத்துலக விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்படும் பலாலி விமான நிலையத்திலிருந்து முதற்கட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ள விமான சேவைகளில் தமிழ்நாட்டிலுள்ள எந்த விமான நிலையமும் இடம்பெறவில்லை எனத் தெரியவருகிறது.

இந்தமாதம்-05 ஆம் திகதி பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க கலந்து கொண்டு விமானநிலைய அபிவிருத்திப் பணிகளை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

2.25 பில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்படவுள்ள இந்த அபிவிருத்தித் திட்டத்துக்கு இந்தியா 300 மில்லியன் ரூபாவை கொடையாக வழங்கவுள்ளது.

இந்நிலையில் முதற்கட்டமாக பெங்களூரு, கொச்சின், மும்பை மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு நேரடி விமான சேவைகள் இயக்கப்படுமெனவும், 75 ஆசனங்களுக்குக் குறைவான ஆசனங்களைக் கொண்ட விமானங்களே சேவையில் ஈடுபடுத்தப்படுமமெனவும் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

வடபகுதியிலிருந்து தமிழ்நாட்டுக்கே அதிகளவானோர் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

இவ்வாறான நிலையில் தமிழ்நாட்டின் சென்னை, திருச்சி, மதுரை போன்ற விமான நிலையங்களைத் தவிர்த்து, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலங்களிலுள்ள விமான நிலையங்களுக்கே முதலில் பலாலியிலிருந்து விமானசேவைகள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்து, முதற்கட்டமாகத் தமிழ்நாட்டிலுள்ள திருச்சி, மதுரை, சென்னை போன்ற விமான நிலையங்களுக்கு விமான சேவைகள் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *