விடுதலைப்புலிகளின் தலைவரின் புகைப்படம் அச்சிடப்பட்ட பத்திரிகையுடன் சென்றவர் கைது!

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவரின் புகைப்படம் அச்சிடப்பட்ட வாராந்த பத்திரிகையை கடைகளுக்கு விநியோகிக்க சென்றவர் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் கடைகளுக்கு விநியோகிப்பதற்காக யாழிலிருந்து வெளிவரும் வாராந்த பத்திரிகையை கொண்டுசென்ற சமயம் குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

ஒட்டுசுட்டான் நெடுங்கேணி வீதியில் வீதிச்சோதனை சாவடியில் நின்ற படையினரால் குறித்த நபர் கொண்டு சென்ற பத்திரிகைகள் சோதனையிடப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டு ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டவரை விசாரித்த பொலிஸார் பின்னர் விடுதலை செய்துள்ளனர் .

போதைபொருள் கடத்தலில் விடுதலை புலிகளிள் ஈடுபட்டார்கள் என ஜனாதிபதி கடந்தவாரம் தெரிவித்த கருத்துக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா உட்பட மறுப்பு தெரிவித்து விடுதலை புலிகள் அமைப்பு அவ்வாறான செயல்களில் ஈடுபடவில்லை என கருத்து வெளியிட்டிருந்தனர்.

இதனை ஒப்பீட்டு பத்தியாக ஒரு பக்கத்தில் எழுதியுள்ளதோடு பத்திரிகையின் முதல் பக்கத்தில் “காலத்தால் உணர்த்தப்படும் வாக்கு மூலங்கள் – பக்கம் 6” என தலைப்பிட்டு தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தை குறித்த பத்திரிக்கை அச்சிட்டிருந்தது.

குறித்த பத்திரிகை யாழ்ப்பாணத்தை தளமாக கொண்டு கடந்த சிலவருடங்களாக வாராந்த பத்திரிகையாக வெளிவருகிறமை குறிப்பிடத்தக்கது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *