பிக் பாஸ் சீஸன் 3 யில் உள்ள ஈழத் தமிழ் பெண் குறித்து டான்ஸ் கலா மாஸ்டர் பரபரப்பு தகவல்

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீஸன் 3 க்கு பார்வையாளர்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறார்கள்.

ஒவ்வொரு சீஸனின் போதும் இது வாடிக்கை தான். பார்வையாளர்கள் மட்டும் கூடுவதில்லை நிகழ்ச்சியைப் பற்றிய கருத்துப் பகிரல்களும் அதிகரித்துக் கொண்டே செல்வதென்பது பிக்பாஸ் சீரிஸ்க்கு வழக்கமான ஒன்றே.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப்பொருத்தமட்டில் நிகழ்ச்சியைப் பார்ப்பவர்கள் அத்தனை பேருக்கும் நிகழ்ச்சி குறித்த கருத்துக்கள் இருக்கும். ஆனால், எல்லா நிகழ்ச்சிகளிலும் மக்கள் தங்கள் கருத்துக்களைப் பொதுவெளியில் பகிர முன் வர மாட்டார்கள்.

ஆனால் பிக்பாஸ் மட்டும் அதற்கு விதிவிலக்கு. பெரிய பெரிய கார்ப்பரேட் அதிகாரிகள், நடிகர், நடிகைகள், ஆசிரியர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், சிறுவர்கள், பெரியவர்கள் எனச் சகலரும் தங்களது கருத்துக்களைச் சரமாரியாகப் பகிர விரும்புவது இந்த ஒரே ஒரு ஸ்பெஷல் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போது மட்டும் தான்.

பிக்பாஸ் குறித்து அடிக்கடி கருத்துப் பகிர்பவர்களில் தமிழ் சின்னத்திரை மற்றும் பெரியதிரை வட்டாரங்களில் முக்கியமானவர்கள் என்றால் அது நடிகை கஸ்தூரி, ஸ்ரீப்ரியா, டான்ஸ் மாஸ்டர் கலா, நடிகர் எஸ் வி சேகர், நடிகர் ராதாரவி உள்ளிட்டோரைக் குறிப்பிடலாம். பிக்பாஸ் குறித்த கருத்துக் கணிப்புகளுக்கு இவர்களை அணுகினால் சொல்வதற்கு நிச்சயம் இவர்களிடமெல்லாம் கருத்துக்கள் இருக்கும்.

அந்த வகையில் டான்ஸ் மாஸ்டர் கலா தொடர்ந்து மூன்று பிக்பாஸ் தொடர்களின் போதும் மறவாமல் தன்னுடைய கருத்தைப் பகிரத் தவறியதில்லை. பிக்பாஸ் சீஸன் 1 ல் கலா மாஸ்டரின் சகோதரி மகளான காயத்ரி ரகுராம் (டான்ஸ் மாஸ்டர்) போட்டியாளராக இடம்பெற்றதால் அப்போதும் கலா மாஸ்டர் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து தனது கருத்துக்களைப் பதிவு செய்திருந்தார்.

அத்துடன் அந்த முறை பொதுமக்களிடையே கடுமையான விமர்சனத்திற்கு உள்ளான ஜல்லிக்கட்டு போராட்டப் புகழ் ஜூலியை அரவணைத்து அவருக்கு சின்னத்திரை காம்பியராகப் பணியாற்றத்தனது ‘ஓடி விளையாடு பாப்பா’ நடனத் தொடர் மூலமாக ஒரு வாய்ப்பையும் உருவாக்கித் தந்தவர் கலா மாஸ்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து பிக்பாஸ் சீஸன் 2 ல் கலாமாஸ்டரின் தோழி நடிகை மும்தாஜ் இடம்பெற்றதால் அப்போதும் நிகழ்ச்சி குறித்தும் மும்தாஜின் சிறப்பான குணங்கள் குறித்தும் கலா மாஸ்டர் தனது கருத்துக்களைப் பகிரத் தவறவில்லை.

இப்போது சீஸன் 3 யிலும் தனது கருத்துக்களை கலாமாஸ்டர் பகிர்ந்திருக்கிறார். ஏனெனில் இம்முறை மாஸ்டரின் சீடர்களில் ஒருவரான சாண்டி மாஸ்டர் போட்டியில் இருப்பதால் கலா மாஸ்டர் தினமும் பிக்பாஸ் பார்ப்பதைத் தவறவிடுவதில்லையாம்.

சாண்டியின் கல கல சுபாவம் சில நேரங்களில் வம்பையும் விலைக்கு வாங்கி வருவதுண்டு. எனவே எல்லா நேரங்களிலும் அந்த சுபாவம் கை கொடுக்காது என சாண்டிக்கு தான் அட்வைஸ் செய்து அனுப்பியதாகக் கூறும் கலா மாஸ்டர், இம்முறை சீஸன் 3 பங்கேற்பாளர்களில் தனது மனதுக்கு நெருக்கமான போட்டியாளராகத் தான் கருதுவது இலங்கையில் இருந்து கலந்து கொண்டவர்களான செய்தி வாசிப்பாளர் லஸ்லியா மற்றும் மாடல் தர்ஷன் இருவரையும் தான்.

அதென்னவோ இருவரையும் பார்க்கும் போது என் குடும்பத்தின் இளைய தலைமுறையினரைப் பார்ப்பது போலவோ அல்லது என் மாணவர்களைப் பார்ப்பது போலவோ நான் உணர்கிறேன் என்கிறார் கலா மாஸ்டர்.

பிக்பாஸ் பார்ப்பதே நேர விரயம் என்று பலர் கமெண்ட் அடித்துக் கொண்டே அதைத் திருட்டுத் தனமாகப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்க பிக்பாஸ் பார்ப்பதோடு அல்லாமல் பிறர் தன்னைப் பற்றி என்ன நினைத்தாலும் பரவாயில்லை என்றெண்ணி அதைப்பார்த்து விட்டு தவறாமல் கருத்துப் பகிர்தலும் செய்வதில் பிக் பாஸ் சீஸன்கள் தோறும் அதன் போட்டியாளர்களைக் காட்டிலும் முன்னிலையில் இருக்கிறார் கலா மாஸ்டர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *