சம்பந்தன் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து! அமைச்சர் மனோ கணேசன் விடுத்துள்ள கோரிக்கை

தற்போதைய அரசாங்கத்தினால் தமிழ் மக்களின் இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு முன்வைக்கப்படும் என்று பெரும் எதிர்பார்ப்பில் இருந்த தமிழ் தலைவர்கள் ஏமாற்றப்பட்டிருப்பதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இந்த ஏமாற்றம் காரணமாகவே ஆயுதம் ஏந்தினாலா இனப்பிரச்சினைக்கு தீர்வு முன்வைக்கப்படும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியதாகவும் அவர் கூறியுள்ளார்.

அரசினால் ஏமாற்றப்பட்டதன் அதிருப்தியினால் தமிழ் தலைவர்கள் வெளியிடும் கருத்துக்களை ஊடகங்கள் திரிபுபடுத்தக்கூடாது என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

எவ்வாறாயினும் வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளுக்குச் சென்று யாராவது மீண்டுமொரு ஆயுதப் போராட்டத்தைப் பற்றியோ அல்லது தனிநாட்டு யோசனை குறித்தோ பேசினால் அவரை மக்கள் தடிகளைக் கொண்டு அடித்து விரட்டுவார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய பேராளர் மாநாட்டில் கலந்துகொண்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை முன்வைக்காது தொடர்ந்தும் இழுத்தடிப்பு செய்து வருவதற்கு எதிராக கடும் ஆத்திரம் வெளியிட்டிருந்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளைப் போல் ஆயுதம் ஏந்தினாலா அரசியல் தீர்வை சிங்கள தலைமைகள் முன்வைக்கும் என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

சம்பந்தனின் இந்தக் கருத்து தென்னிலங்கை ஊடகங்களில் வெளியான பின்னர் தென்னிலங்கை அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

இதுகுறித்து அமைச்சர் மனோ கணேசன் இன்றைய தினம் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டார்.

“அப்படியல்ல. திரிபுபடுத்த வேண்டாம். சம்பந்தனுக்கு வயதாகிவிட்டது. எதிர்பார்ப்புக்கள் சுக்கு நூறாகி விட்டது. ஒரே நாட்டிற்குள் வாழ்வோம் என்கிற நிலைப்பாட்டிற்கு அவர் வந்தார். ஆயுதப் போராட்டம் வேண்டாம் என்று பகிரங்கமாகவே அறிவித்தார்.

அவர் எதிர்கட்சித் தலைவர் பதவியை ஏன் ஏற்றார் என்றால் இலங்கையில் ஆட்சிக்குள் தமிழ் மக்கள் வந்துவிட்டதை நாட்டிற்கு காண்பிப்பதற்காகவே அவர் அந்த பொறுப்பை ஏற்றார். எனினும் எவரும் அதனை உணரவில்லை.

தனிநாடு தேவையில்லை, இனப்பிரச்சினைக்குத் தீர்வாக ஆயுதங்களை கையிலெடுக்க மாட்டோம் என்றார். அவற்றை கைவிட்டு வந்தவருக்கு நாங்கள் என்ன கொடுத்தோம். ஒன்றையும் கொடுக்காமல் அவர்களை வெறுங்கையுடனேயே வடக்கு, கிழக்குக்கு அனுப்பிவைத்தோம்.

அதனால் சோர்வுற்று பேசியுள்ளார். இப்போதும் கூட அரசியல்வாதிகள் சோர்வுற்ற பின்னர், இந்த நாட்டை வெள்ளையர்கள் ஆட்சி புரிந்திருந்தால் நலமாகியிருக்கும் என்று அதிருப்தியில் கூறுகிறார்கள்.

அதுபோலவே சம்பந்தன் கூறியதும் கலக்கமடைந்து அதிருப்தியில் கூறிய பேச்சாகும். இப்போது வடக்கு கிழக்கு பகுதிகளுக்குச் சென்று ஆயுதப் போராட்டமோ அல்லது தனிநாட்டு சிந்தனை குறித்து யாராவது பேசினால் தடிகளைக் கொண்டுதான் தாக்குவார்கள் என்பது நிச்சயம்” என அவர் கூறியுள்ளார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *