“ஆலயத் திருவிழாவில் வைத்து சிக்கிய யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூவர்! பெண்ணொருவரும் அடங்குவதாக தகவல்”

இனிப்பு பண்டங்களை விற்பனை செய்யும், யாழ். பண்டத்தரிப்பு பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் உள்ளிட்ட மூவருக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாக ஓமந்தை சுகாதாரப் பரிசோதகர் கே.சிவரஞ்சன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

கடந்த ஞாயிற்றுக்கிழமை வவுனியா – கிடாச்சூரி கண்ணகி அம்மன் ஆலய திருவிழாவின் போது சட்ட ரீதியாக தடை செய்யப்பட்ட மீள் சுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாத்திரங்களில் இனிப்பு பண்டங்களான பூந்தி, தேன்குழல் போன்றவற்றை யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பிலிருந்து எடுத்து வந்து விற்பனை செய்து வந்தவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் நீண்ட காலமாக இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த நிலையில் ஏற்கனவே இரண்டு தடவைகள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இவர்கள் மீண்டும் வசமாக சிக்கியுள்ளதால் அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உணவு பொருட்களை திறந்த நிலையில் வாகனத்தில் களஞ்சியப்படுத்தி எடுத்து சென்றதும், திறந்த வெளியில் வைத்து அவற்றை விற்னை செய்ததும், மீள் சுழற்சி செய்யப்பட்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாத்திரங்களில் களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமையும் தொடர்பில் இவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான மோசமான செயற்பாடுகளால் உணவுப்பண்டங்களுடன் நுண்ணுயிர்கள், தூசி துணிக்கைகள் எமது உடலிற்குள் சென்று நோய்களை ஏற்படுத்தும் சாத்தியம் காணப்படுகின்றது. இதனால் புற்று நோய் உட்பட பல்வேறு நோய்கள் பரவும் ஆபத்தும் காணப்படுகின்றது.

இந்த சந்தர்ப்பத்திலேயே மூவருக்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது இரண்டு எதிரிகளுக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுகளும், அவற்றுக்கு தலா 6000 ரூபா தண்டப்பணமும் மற்றைய எதிரிக்கு 3000 ரூபா தண்டப்பணமும் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையில் ஓமந்தை சுகாதார பரிசோதகர் கே.சிவரஞ்சன், நொச்சிமோட்டை சுகாதார பரிசோதகர் ரி.வாகிசன் ஆகியோரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் கைப்பற்றப்பட்ட பொருட்களை அழித்துவிடுமாறு நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை வவுனியா நகர்பகுதியில் இடம்பெற்ற பொசன் பண்டிகையின் போது உணவு விநியோகம் மேற்கொள்ளப்பட்ட இடங்களை வவுனியா சுகாதாரப் பரிசோதகர்கள் பார்வையிடப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கையில் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *