நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் இருந்த இருபெயர் பதாகைகளும் அகற்றல்!

நீராவியடிப்பிள்ளையார் ஆலய வளாகத்தில் காணப்பட்ட குருகந்த ரஜமஹா விகாரையின் பெயர் பலகையினையும், நீராவியடிப்பிள்ளையார் ஆலத்தின் பெயர்பலகை ஒன்றினையும் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் அகற்றியுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மதரீதியிலான பிரச்சினையினை ஏற்படுத்தி நீதிமன்றில் வழக்கு தொடர்ந்த வண்ணமுள்ள நீராவியடிப்பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள வளாகத்தில் பௌத்த விகாரை அமைத்து குருகந்த ரஜமஹா விகாரை என பெயர் சூட்டப்பட்டு வழிபாடுகள், அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தள்ளது.

இந்நிலையில் இரு மதங்களுக்கிடையில் வாழிபாடு மற்றும் இடம் தொடர்பிலான பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணை நீதி மன்றில் தொடர்ந்து வந்துள்ள நிலையில் இரண்டு தரப்பினரும் அமைதிக்கு பங்கம் இன்றி வழிபாடுகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட நீதிமன்று கட்டளையிட்டிருந்த நிலையில், பெரும்பான்மை இனத்தினை சேர்ந்த பௌத்த துறவிகள் மக்கள் ஆகியோர் ஒன்றிணைந்து கடந்த 05ஆம் திகதி ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள்.

இந்நிலையில் கடந்த 11ஆம் திகதி அமைச்சர் மனோ கணேசன் பயணம் மேற்கொண்டு நேரடியாக சென்று பார்வையிடிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த இடத்தில் குருகந்த ரஜமஹா விகாரை என பௌத்த துறவியாலும் நீராவியடிப்பிள்ளையார் என கிராம மக்களாலும் பெயர் பலகை சூட்டப்பட்டுள்ளது.

நீராவியடிப்பிள்ளையார் ஆலயத்திற்கு அமைக்கப்பட்ட இரண்டு பெயர் பலகைகளில் ஒரு பெயர்பலகைக்கு அனுமதி பெறப்பட்டு அமைக்கப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த பெயர்பலகை சூட்டுவதற்கும், அது அந்த இடத்தில் நாட்டுவதற்கும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அனுமதி தேவை என்ற நிலையில், நேற்றைய தினம் குறித்த இடத்திற்கு சென்ற வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் அனுமதி அற்ற நிலையில் நாட்டப்பட்ட குருகந்த ரஜமஹா விகாரையின் பெயர் பலகையினையும், நீராவியடிப்பிள்ளையார் ஆலத்தின் பெயர்பலகை ஒன்றினையும் அகற்றியுள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்ட பொலிஸார், நீதிமன்ற அதிகாரிகள், மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் முன்னிலையில் வீதியில் இருந்து 15 மீற்றர் தூரத்திற்கு குறித்த இரண்டு பதாகைகளும் காணப்பட்டுள்ளதால் அவை அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *