பெண்ணிடம் சேட்டை புரிந்த இளைஞர்கள் : தட்டிக்கேட்ட தந்தை உட்பட இருவர் மீது தாக்குதல்

வவுனியா எல்லப்பர்மருதங்குளம் பகுதியில் பெண்ணிடம் சேட்டை புரிந்த இளைஞர்களின் செயற்பாட்டினை தட்டிக்கேட்ட குறித்த பெண்ணின் தந்தை மற்றும் அவரது அண்ணனின் நண்பன் மீதும் குறித்த இளைஞர்கள் தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பித்து சென்றுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா சிதம்பரபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்லப்பர்மருதங்குளம் 8ம் ஒழுங்கையில் குறித்த பெண் அவரது தந்தையுடன் அயலில் உள்ள பூப்புனித நீராட்டு விழாவிற்கு சென்றுள்ளார். அவ்வீதியில் நின்ற இளைஞர்கள் குறித்த பெண்ணை கிண்டல் செய்ததுடன் கையை பிடிக்கவும் முயன்றுள்ளனர்.

இதன் போது குறித்த பெண்ணின் தந்தை அவ் இளைஞர்களுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட சமயத்தில் அவ் இளைஞர்களில் ஒருவர் பெண்ணின் தந்தை மீது கட்டையினால் தலையில் தாக்கியுள்ளார். அதையடுத்து அருகில் நின்ற மற்றைய இளைஞர்களும் அவர்கள் கையில் வைத்திருந்த தலைக்கவசத்தினால் பெண்ணின் தந்தை மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதையடுத்து குறித்த பெண் வீட்டிற்கு சென்று அவரது அண்ணனின் நண்பனை அழைத்துள்ளார். பெண்ணின் தந்தையை காப்பாற்ற வந்த குறித்த பெண்ணின் அண்ணனின் நண்பன் மீது அவ் இளைஞர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இதன் போது அயலவர்கள் ஒன்று கூடியதையடுத்து அவ் இளைஞர்கள் அவ்விடத்தினை விட்டு தப்பித்து சென்றுள்ளனர்.

அயலவர்களின் உதவியுடன் படுகாயமடைந்த பெண்ணின் தந்தை மற்றும் அண்ணனின் நண்பன் ஆகியோர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் சுயநினைவினை இழந்த நிலையில் பெண்ணின் தந்தை அனுராதபுரம் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக சம்பவம் இடம்பெற்ற அன்றையதினமே வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதுடன் தாக்குதல் மேற்கொண்ட இளைஞர்களின் புகைப்படம் மற்றும் அவர்களின் தகவல்கள் அனைத்தும் பொலிஸாருக்கு வழங்கிய நிலையிலும் நான்கு நாட்கள் கடந்தும் பொலிஸார் எவ்வித நடவடிக்கையினையும் மேற்கொள்ளவில்லை

இந் நிலையில் இன்றையதினம் பொலிஸாரின் தமிழ் மொழி மூல முறைப்பாட்டு பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டதுடன் குறித்த பெண்ணின் தந்தை மற்றும் அண்ணனின் நண்பன் மீது தாக்குதல் மேற்கொண்ட இளைஞர்களில் ஒருவரை அக்கிராம இளைஞர்கள் சூட்சுமமான முறையில் ஓர் இடத்திற்கு வரவழைத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

அவ்விடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் அவ் இளைஞனை வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன் அவரது உதவிடன் மேலும் ஓர் இளைஞனையும் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் அவ் இரு இளைஞர்களையும் வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *