இறுதி யுத்தத்தில் கைவிடப்பட்ட மீன்பிடி படகுகளை மீள பெற்றுக்கொள்ள ஓர் சந்தர்ப்பம்
இராணுவத்தினரால் கையளிக்கப்பட்ட 50 மீன்பிடி படகுகளின் ஆதாரங்களை சமர்ப்பிப்பதன் மூலம் மீன்பிடிப்படகுகளை உரிமையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும் என முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் சங்கங்களின் சமாசம் அறிவித்துள்ளது.
இறுதி யுத்தத்தின் போது இராணுவத்திரால் கைப்பற்றப்பட்ட 50 கடற்தொழில் படகுகள் கடந்த மே மாதம் 16ம் திகதி முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் சங்கங்களின் சமாசத்தில் இராணுவத்தினர் கையளித்துள்ளனர்.
குறித்த மீன்பிடிப்படகுகள் 10 வருடங்களாக முள்ளிவாய்க்கால் கப்பலடி இராணுவ முகாம் கட்டுப்பாட்டில் இருந்த காரணத்தினால் படகுகளின் உரிமையாளர்கள் இராணுவமுகாம் சென்று அடையாளம் காண்பிப்பதற்கு முடியாமல் போனதாக சமாசம் கருதுகின்றது.
இந்நிலையில் இராணுவத்தினரால் கையளிக்கப்பட்ட படகுகளின் உரிமையாளர்கள் தகுந்த ஆதாரங்களை சமர்ப்பிப்பதன் மூலம் படகுகளை பெற்றுக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இராணுவத்தினரால் கையளிக்கப்பட்ட 50 படகுகளில் 15க்கும் மேற்பட்ட படகுகள் யுத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.
மேலும் யாழ் – காரைநகர் ஆழ்கடல் மீன் பிடித்தொழிலுக்கு பயன்படுத்தப்பட்ட கடல்விழி, காட்டுராசா போன்ற பெயர்களை பதித்த பெரிய மீன்பிடிப்படகுகள் 2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது முல்லைத்தீவில் கைவிடப்பட்டுள்ளது.
எனினும் குறித்த படகுகள் தற்பொழுது வரை ஆழ்கடல் மீன்பிடித்தொழிலுக்கு பயன்படுத்தக் கூடிய வகையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.