விசாரணை அறிக்கையினை வடக்கு ஆளுநர் வெளியிடாமல் இருப்பது ஏன்?
2018ஆம் ஆண்டின் இறுதியில் கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்ற வெள்ளப் பெருக்கு தொடா்பாக விசாரணை நடாத்துவதற்காக ஆளுநரால் நியமிக்கப்பட்ட விசாரணை குழுவின் அறிக்கையை ஆளுநரே வெளியிடாமல் வைத்திருப்பது எதற்காக என மக்கள் முன்னேற்ற கூட்டணியின் செயலாளர் கணேஸ் வேலாயுதம் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேற்படி விடயம் தொடா்பாக நேற்று யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தொிவிக்கும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது தொடா்பாக மேலும் அவா் கூறுகையில்,
கடந்த வருடம் டிசம்பர் மாதம் இரணைமடுக்குளத்திலிருந்து வெளியேறிய வெள்ளத்தினால் கிளிநொச்சி மாவட்ட மக்கள் முற்றாக பாதிக்கப்பட்டிருந்தனர்.
குறிப்பிட்ட அடிமட்டத்திற்கு மேலாக நீர்நிரம்பிய நிலையில் வான்கதவுகள் திறக்கப்படாமையினால் இவ்வனர்த்தம் ஏற்பட்டிருந்தது. இது குறிப்பிட்ட அதிகாரிகளின் அசமந்த போக்கால் நடைபெற்றதாகவும் நிர்மாண வேலையில் பல்வேறு ஊழல்கள் இடம்பெற்றிருப்பதாகவும் பல்வேறு தரப்பினர் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
அதனை தொடர்ந்து இவ்வனர்த்தம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு முன்னாள் வடமாகாண ஆளுனர் கௌரவ றெஜினோல்ட் கூரேயினால் யாழ் பல்கலைக்கழக பொறியியல் பீட தலைவர் எஸ்.சிவகுமார் தலைமையில் மூவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டது.
இது 28.12.2018 அன்று நியமிக்கப்பட்டு 29.12.2018 விசாரணைகள் ஆரம்பிக்க இருந்தவேளை பேராசிரியர் எஸ்.சிவகுமாரனுக்கு விசாரணையை நிறுத்திவைக்குமாறு குறுந்தகவல் ஒன்று அனுப்பப்பட்டதாகவும் அதனை தொடர்ந்து ஆளுனரின் செயலாளர் இளங்கோவனை தொலைபேசியில் அழைத்து விசாரணையை தொடரவேண்டாம் எனவும் அறிவித்ததாக குறிப்பிட்டிருந்தார்.
இன்றுவரை எழுத்துமூலம் எந்தவொரு தகவலும் தமக்கு வழங்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார். அதனை தொடர்ந்து புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுனர் கௌரவ சுரேன் ராகவன் பல்வேறு தரப்பினரதும் கோரிக்கைக்கு அமைய 11.01.2019 இல் இரணைமடுக்குள விசாரணையை ஆரம்பிப்பதற்கு புதிதாக மூவர் அடங்கிய குழுவொன்றினை நியமித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.
இவ்விசாரணைகளின் பின்னர் கிளிநொச்சி நீர்ப்பாசண திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் அதே பதவியில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இக்குழுவினால் விசாரணை தொடர்பான முழு அறிக்கையும் ஆளுனாிடம் வழங்கப்பட்டு மேலதிக நடவடிக்கைகளுக்காக பிரதம செயலாளர் பத்திநாதனிடம் அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வெளிவந்திருந்தது.
இது தொடர்பில் பிரதம செயலாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது விசாரணை தொடர்பான அறிக்கை இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என குறிப்பிட்டிருந்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் வடமாகண ஆளுனர் பேராசிரியர் எஸ்.சிவகுமாரை தொடர்பு கொண்டு விசாரணை குழுவில் அங்கம் வகிக்குமாறு கேட்டபோது தாம் வருவதாக குறிப்பட்டிருந்தார்.
வடமாகாண ஆளுனரால் புதிதாக குழு நியமிக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு முழுமையான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அதனை வெளியிடாது மறைத்து வைக்க காரணம் என்ன?
இக்குழுவில் திறமைவாய்ந்த நேர்மையான அதிகாரிகள் உள்ளடக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்ற பின் மீள்விசாரணை அவசியமற்றது.
ஆளுனர் தம்மிடம் உள்ள விசாரணை அறிக்கையினை வெளியிட வேண்டும். பலதரப்பட்டவர்களின் கேள்விகளுக்கும் பதில்கிடைக்கும் வகையில் அறிக்கை வெளியிடப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.