பசுமை வீதியாக மாறும் A9 வீதி! வடமாகாண ஆளுநர் தலைமையில் ஆரம்பம்

கண்டி – யாழ் பிரதான வீதியான A9 வீதியின் வவுனியா தொடக்கம் இயக்கச்சி வரையான வீதியின் இருமருங்கிலும் மரக்கன்றுகளை நாட்டும் ஆரம்ப செயற்திட்டம் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தலைமையில் நடைபெற்றுள்ளது.

குறித்த செயற்திட்டம் முல்லைத்தீவு A9 வீதியின் மாங்குளம் 226ஆவது மைல்கல் பிரதேசத்தில் நேற்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.

மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக் கருவில் உருவான நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய வேலைத்திட்டத்தின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் நேற்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

அதேவேளை இதன் ஒரு அங்கமாக உலக சுற்றாடல் தினத்தை கொண்டாடும் முகமாகவும் இத்தினைத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கும் செயற்திட்டங்களுக்கு வடமாகாணத்தின் பங்களிப்பினை வழங்கும் நோக்கிலும் இந்த மரநடுகைத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆயிரம் மரக் கன்றுகள் இன்றைய தினம் நாட்டப்பட்டு இந்த வேலை திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது.

A9 வீதியின் குறிப்பிட்ட பகுதியினை பசுமை வீதியாக மாற்றும் ஆளுநரின் எண்ணக்கருவுக்கு அமைய இந்த மரநடுகைத் திட்டம் வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் டிரஞ்சன் மேற்பார்வையில் வடமாகாண விவசாய அமைச்சின் உதவியுடன் பிரதேச சபைகளின் பராமரிப்பில் இடம்பெறுவதுடன் இந்த திட்டத்தின் மாவட்ட ரீதியான நிகழ்வுகள் கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்ட செயலாளர்களின் தலைமையில் வவுனியா மற்றும் ஆனையிறவு பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஆரம்ப நிகழ்வில் வடக்கு மாகாண சபையின் ஆளுநர் சுரேன் ராகவன், யாழ். இந்திய துணை தூதர், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி வி கே சிவஞானம், கிளிநொச்சி மாவட்ட இராணுவ தளபதி, முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்களுக்கான உதவி பொலிஸ் அத்தியட்சகர்க,ள் யாழ். மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், அரச உத்தியோகத்தர்கள், இராணுவத்தினர் பொலிஸார் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு இந்தத் திட்டத்தில் மரங்களை நாட்டி இந்த திட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *