முல்லைத்தீவில் குடியேறிய சிங்கள மக்களுக்கு வீட்டுத்திட்டம் : கடும் பிரயத்தனத்தால் இணக்கம்

முல்லைத்தீவு, கொக்கிளாய் பகுதியில் குடியேறிய சிங்கள மக்களுக்கு அவ்விடத்தில் வீடமைப்புத் திட்டத்துக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிங்கள மக்கள், இன்று முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தல் ஈடுபட்ட மக்கள், 1934 ஆம் ஆண்டு முதல் தங்களுடைய மூதாதையர்கள் இங்கு வந்து தொழில் செய்து வந்ததாகவும் அதனைத் தொடர்ந்து தாங்களும் இங்கு வாழ்ந்து வருவதாகவும் கடந்த 30 வருட யுத்தத்தின் போதும் தாங்கள் இந்த இடத்திலேயே இருந்ததாகவும் தெரிவித்தனர்.

அத்துடன், 1982 ஆம் ஆண்டு தமக்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் 62 வீட்டுத்திட்டங்கள் அமைக்கப்பட்டதாகவும் அந்த வீடுகளின் அத்திவாரங்கள் தற்போதும் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே, அந்த இடத்தில் தமது வீடுகளை நிர்மாணிப்பதற்கு பல்வேறு முயற்சிகளின் மத்தியில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் தம்மில் ஒரு தொகுதியினருக்கான வீட்டுத் திட்டத்தை இன்று ஆரம்பிக்க இருந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்ட செயலகம், கரைதுறைப்பற்று பிரதேச செயலகம் மற்றம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோர் இணைந்து தடுத்து நிறுத்தியுள்ளதாக குற்றஞ்சுமத்தி சிங்கள மக்கள் குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, இன்று காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக ஒன்றுகூடிய மக்கள் குறித்த விடயம் தொடர்பாக மாவட்ட செயலருடன் கலந்துரையாடுவதற்காக மாவட்ட செயலகத்துக்குள் நுழைய முற்பட்ட நிலையல் செயலகத்தின் வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து பொலிஸார் சென்று மாவட்ட செயலருடன் கலந்துரையாடிதுடன் ஆர்ப்பாட்டக்காரர்களில் மூவரை கலந்துரையாட அனுமதித்தனர். சுமார் ஒரு மணிநேர கலந்துரையாடலைத் தொடர்ந்து இருக்கின்ற சிக்கல் நிலைமைகளைப் கூறி ஒருவார கால அவகாசத்தில் இதற்கான தீர்வு குறித்து தெரிவிப்பதாக மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மாவட்ட செயலாளர் போராட்டக்காரர்களை சந்தித்து நேரடியாக குறித்த விடயத்தை தெரிவித்தார். இதனை ஏற்க முடியாதெனவும் உடனடியாக தீர்வு வேண்டுமெனவும் அரச அதிபரை மக்கள் கடும் தொனியில் எச்சரிக்கை விடுத்ததால் மாவட்ட செயலாளர் குறித்த இடத்தைவிட்டு சென்றார்.

இறுதியில் மக்களில் சிலர் மாவட்ட செயலரை மீண்டும் சந்தித்தனர். இதையடுத்து மாவட்ட செயலாளர் இன்று மாலை குறித்த இடத்துக்கு நேரில் வருகைதருவதாக அளித்த உறுதிமொழியைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

இந்நிலையில் இன்று மாலை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை மாவட்ட முகாமையாளர், மேலதிக மாவட்ட செயலாளர், கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர், காணி உத்தியோகத்தர், நில அளவை திணைக்கள உத்தியோகத்தர் ஆகியோருடன் சம்பவ இடத்துக்கு சென்ற முல்லைத்தீவு மாவட்ட செயலாளர், குறித்த பகுதியில் உள்ள மக்களின் வாழ்விடங்களை பார்வையிட்டார்.

அத்துடன், அந்த பகுதியில் உள்ள காணிகளை அடையாளப்படுத்தி அவ்விடத்தில் அமைந்துள்ள பாடசாலையுடனான சுமார் 3 ஏக்கர் காணியில் ஒருவருக்கு தலா 6 பேச் காணியில் 62 வீடுகளை அமைக்க அனுமதியளித்தார். இதற்கு மக்கள் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.

இதேவேளை, இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவிக்கையில், “அத்துமீறி தமிழ் மக்களது காணிகளில் குடியேறி இருக்கின்ற மக்களுக்கு வீடுகளை வழங்க முடியாத நிலை காணப்படுகிறது. இவர்கள் குடியேறும் போது தமிழ் மக்களால் தடுக்கக்கூடிய நிலை இல்லை. காரணம் நாட்டில் நிலவிய யுத்தம்.

தற்போது யுத்தம் நிறைவடைந்த நிலையில் தமிழ் மக்கள் தமது காணியை கோருகின்றனர். இந்நிலையில் அத்துமீறி குடியேறியுள்ளவர்களுக்கு வீடு வழங்க தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினர் முற்படுகின்றனர்.

ஆனால் அந்த காணிகளுக்கு ஏற்கனவே தமிழ் மக்களுக்கு பிரிட்டிஷ் காலத்து உறுதிகள் காணப்படுகின்றன. இவற்றை எவ்வாறு அவர்களுக்கு வழங்குவது? அதனாலேயே இதனைத் தடுத்துநிறுத்த முயற்சிகளை மேற்கொண்டேன். இவ்வாறே எமது பூர்விக பூமியான மணலாற்றையும் இன்று அவர்கள் ஆக்கிரமித்திருக்கின்றனர்” என அவர் தெரிவித்துள்ளார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *