தேசிய நல்லிணக்கத்தை இரு கைகளாலும் பற்றிப் பிடித்து முன்னேற வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி.

முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி அணிகின்ற ஆடைகள் தவிர்க்கப்படல் வேண்டும் எனக் கூறப்படுகின்ற – தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், அப் பெண்கள் தலையை மூடிச் செல்கின்றபோது, பல்வேறு அரச நிறுவனங்களில் பல்வேறு சிரமங்களுக்கும், அசௌகரியங்களுக்கும் ஆளாக்கப்பட்டு வருவதாகவும், இதன் மூலமாக அப் பெண்கள் அவமரியாதைக்கு ஆளாக்கப்பட்டு வருவதாகவும் பல முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன. எனவே, இத்தகைய உணர்வு ரீதியிலான செயற்பாடுகள் உடனடியாக இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெறுகின்ற நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

குறிப்பாக, இத்தகையதொரு தடையை கொண்டு வருவதற்கு முன்பதாக முஸ்லிம் மதம் சார்ந்த அமைப்புகளினதும் உடன்பாட்டுடன் அதனைக் கொண்டு வந்திருக்க வேண்டும். என்றாலும், கொண்டு வரப்பட்டுவிட்டது. அவ்வாறு கொண்டுவரப்பட்டதன் பின்னர், அது தொடர்பில் அரசு ஒரு அறிவித்தலை விடுத்துவிட்டால், முஸ்லிம் மக்கள் அதனைப் பின்பற்றுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

இத்தகைய நிலையில், நிறுவனத்திற்கு நிறுவனம், இடத்திற்கு இடம் ‘முக்தை மூடி ஆடைகள் அணிவோர் உட்பிரவேசிக்கக் கூடாது’ என அறிவிப்புப் பலகைகள் தொங்கவிடப்பட்டு, அந்த மக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவது மட்டுமல்லாது, அவர்களை ஒருவிதமான அவல நிலைக்குத் தள்ளுகின்றதும், ஏனைய இன சமூக மக்களின் முன்பாக அவர்களை ஒதுக்கிக் காட்டுவதுமான செயற்பாடுகள் வரவேற்கத்தக்கதல்ல என்பதையும் நான் இங்கு எடுத்துக் கூற விரும்புகின்றேன்.

ஒரு கையிலே தேசிய நல்லிணக்கத்தையம், மறு கையிலே தேசிய நல்லிணக்கத்தை சிதைக்கின்ற வகையிலான ஏற்பாடுகளையும் சுமந்துகொண்டு பயணிப்பீர்களாயின் அதனால் எவருக்கும் எவ்விதமான நன்மைகளும் ஏற்பட்டுவிடப் போவதில்லை.

எனவே, தேசிய நல்லிணக்கத்தை இரு கைகளாலும் பற்றிப் பிடித்துக் கொண்டு, முன்னேறுவார்களாயின் அதுவே, இந்த நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நன்மையினைத் தரக்கூடியதாக இருக்கும்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *