யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் பிணை கோரிக்கை நிராகரிப்பு

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்குத் தொடர்பான விடயங்கள் சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் ஆராயப்பட்டு வருவதனால் நீதிமன்றால் பிணை வழங்க முடியாது என்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிபதி நீதவான் ஏ.எஸ்.பி போல் உத்தரவிட்டுள்ளார்.

வழக்கில் மாணவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் முன்வைத்த தவறுகள் தொடர்பில் வியாக்கியானம் அளித்த நீதவான், அவற்றில் சிலவற்றை திருத்த முடியும் எனக் கட்டளையிட்டுள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் ஒளிப்படம் மற்றும் இனப்படுகொலை தொடர்பான பதாதைகள் என்பன மாணவர் ஒன்றியத்தின் அலுவலக அறையில் இருந்து மீட்கப்பட்டன.

அதனையடுத்து மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அத்துடன் அவர்களுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

கடந்த 03ஆம் திகதி மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளரையும் கைது செய்ததோடு அன்றிரவு இரவு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் அந்தோனி சாமி பீற்றர் போல் முன்னிலையில் முற்படுத்திய போது, எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கை நகர்த்தல் பத்திரம் நேற்றுமுன்தினம் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டி மாணவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் சமர்ப்பணம் செய்தனர்.

மாணவர்கள் சார்பான விண்ணப்பம் மீது இன்று தீர்ப்பு வழங்குவதாக மன்று தவணையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *