யாழில் வெற்றுக்காணிக்கு வைக்கப்பட்ட தீயால் பற்றியெரிந்த அயல் வீடுகளும்

நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட ஜே/99 கிராம சேவகர் பிரிவிலுள்ள வெற்றுக் காணியொன்றில் குப்பைக்கு வைத்த தீ அருகிலுள்ள வீடுகளுகளுக்கும் பரவியதில் வீட்டில் இருந்த உடைமைகள் எரிந்து நாசமாகியுள்ளது.

இதன் போது பல இடங்களுக்கும் தீ பரவியிருந்த நிலையில் அப் பகுதி இளைஞர்களின் முயற்சியினால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு பெரும் அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச் சம்பவம் ஜே/99 கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட தாமரை வீதியில் வண்ணார்பண்ணையில் இன்று(7) மதியம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

அப்பகுதியிலுள்ள காணியொன்றில் இருந்த குப்பைகளுக்கு இன்று மதியம் தீ வைக்கப்பட்டுள்ளது. பனை மரத்திற்கு அருகாமையில் வைக்கப்பட்ட இத் தீயானது பனைமரம் முழுவதும் பரவி காற்றினால் அருகிலுள்ள வீடுகளுக்கும் பரவியதிலேயே இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

தீ அருகிலிருந்த வீட்டிற்குள் தீ பரவியதில் வீட்டின் சில பகுதிகளிலும் பற்றிக் கொண்டதுடன் வீட்டில் இருந்த உடைமைகளும் எரிந்து நாசமாகியுள்ளது. அதே போன்றே அருகிலுள்ள வீடுகளுக்கும் தீ பரவி வேலிகள், வீடுகள், தென்னை மரங்கள், உடைமைகள் என்பன தீயில் எரிந்து சேதமாகியுள்ளன.

இவ்வாறு தென்னை மரங்களில் தீ பற்றிக் கொண்டதை அவதானித்த அப்பகுதி மக்களும் இளைஞர்களும் தாமே தீயணைக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்த தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர்.

இவர்களது செயற்பாட்டினால் காற்றில் பல இடங்களுக்கும் பரவிக் கொண்டிருந்த தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கின்றது.

இதே வேளை வறுமைக் கோட்டிற்குட்பட்டு பாதிக்கப்பட்டுள்ள இம் மக்களை அப் பகுதி கிராம சேவகர் பார்வையிட்டு விபரங்களையும் பெற்றுக் கொண்டுள்ளார்.

மழை காலங்களிலும் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் தாம் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டு வருகின்ற போதும் எந்தவித உதவிகளும் கிடைக்கப் பெறுவதில்லை எனவும் கவலை வெளியிட்டுள்ள அப்பகுதி மக்கள் தனது நிலையை உணர்ந்து தமக்கான உதவிகளை வழங்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *