நாங்களும் மக்களைக் காப்பாற்றத்தான் போராடினோம்! – முன்னாள் போராளிகள்

யாழ்ப்பாண நகரில் வாழும், புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கும், இராணுவத்தின் 512ஆவது பிரிகேட் கட்டளைத் தளபதிக்கும் இடையில் இன்றைய தினம் சந்திப்பொன்று 512ஆவது படைத்தளத்தில் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் 512ஆவது பிரிகேட் தலைமையகத்தின் உயர் இராணுவ அதிகாரிகள், மற்றும் யாழ்ப்பாண பிரதேசத்தில் வாழும் 50 இற்கும் மேற்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் கலந்து கொண்டனர்.

இச் சந்திப்பின் போது உரையாற்றிய 512 ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி நிலந்த,

அதாவது நீங்கள் புனர்வாழ்வளிக்கப்பட்ட சமூகமயமாக்கப்பட்ட பின்னர் நான் உங்களை அழைத்து சந்திக்க வேண்டிய தேவை இல்லை. எனினும் நாட்டின் இன்றைய சூழ்நிலை காரணமாக நான் உங்களை சந்திப்பதற்காக அழைத்துள்ளேன்.

குறிப்பாக நான் யாழ்ப்பாணத்திலுள்ள மும்மத பிரதிநிதிகள், வர்த்தக சங்கத்தினரை சந்தித்துள்ளேன். அதன் பின்னர் உங்களை அழைத்துள்ளேன். தற்போது நாட்டில் உள்ள நிலைமை யாழ். குடாநாட்டிலும் இடம்பெறா வண்ணம் இருக்க வேண்டுமென்னபதே எனது நோக்கம்.

எனவே யாழ்ப்பாணத்தின் அழகையும், யாழ்ப்பாண மக்களையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எம் அனைவருக்கும் உள்ளது. எனவே நீங்கள் யாழ்ப்பாணத்திற்கு, வெளி மாவட்டத்திலிருந்து வருவோர் தொடர்பில் அவதானமாக இருப்போமாக இருந்தால், கொழும்பில் நடந்த தாக்குதல் போல் யாழ்ப்பாணத்தில் இடம்பெறாமல் தடுக்க முடியும் எனத் தெரிவித்தார்.

பொதுமக்கள் வெளி மாவட்டத்திலிருந்து வருவோர் தொடர்பில் எமக்கு தகவல் தருவதன் மூலம் அனைத்து குற்றச்செயல்களையும் இல்லாதொழிக்க முடியும் எனத் தெரிவித்தார்.

இதன் போது கருத்துத் தெரிவித்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி, நாங்களும் மக்களைக் காப்பாற்றத்தான் போராடினோம் எச் சந்தர்ப்பத்திலும் மக்களைக் கொலை செய்ய நாம் முயற்சித்திருக்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார்கள்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *