வடக்கு மாகாணத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர்

நாட்டில் ஏற்பட்டுள்ள குண்டுத்தாக்குதல்களை அடுத்து மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளின் அமைவாக வடக்கு மாகாணத்தின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வட மாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் றொசான் பெர்னாந்து தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இன்று கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சர்வமத குருமார்கள் சிவில் சமூக பிரதிநிதிகள் ஆகியோருடனான கலந்துரையாடல்கள் இடம்பெற்றதனை தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடமாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்று வருகிறது. பொலிஸ் தலைமையகத்தின் பணிப்புக்கமைய இவ்வாறான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வடக்கு மாகாணத்தில் இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றின் பங்களிப்புடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த வகையில் வடக்கின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் வருகின்ற 29 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் மாணவர்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படடுள்ளது.

பாடசாலை அதிபர்களுடனான சந்திப்பில் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாணவர்கள் அச்சம் பதற்றம் இன்றி பாடசாலைகளுக்கு சென்று தங்களது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

குறித்த கலந்துரையாடலில் கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபர் மகிந்த குணரட்ன,கிளிநொச்சி பொலிஸ் அத்தியட்சர் ஜெயந்த ரத்நாயக்க சர்வ மதத்தலைவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *